புவனேஸ்வர்: ஒடிசா மாநில சுகாதாரத் துறை அமைச்சரான நாபா கிஷோர் தாஸை, உதவிசப் - இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டதில், மார்பில் தோட்டா பாய்ந்து பலியானார். இதையடுத்து, உதவி சப் - இன்ஸ்பெக்டரை கைது செய்த போலீசார், அவரிடம்தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இந்த கட்சியைச் சேர்ந்த நாபா கிஷோர் தாஸ், 61, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். இவர், ஒடிசாவின் ஜார்சுகுடா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று காரில் சென்று கொண்டிருந்தார்.
வழியில், பிரஜ்ராஜ் நகர் பகுதியில் அமைச்சரைப் பார்த்து சாலை ஓரத்தில் இருந்த மக்கள் கையசைத்தனர். அவர்களுடன் உரையாடுவதற்காக, காரை நிறுத்திவிட்டு அமைச்சர் இறங்கினார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த உதவி சப் - இன்ஸ்பெக்டர் கோபால் தாஸ், அமைச்சரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
ரத்த வெள்ளம்
தோட்டா பாய்ந்ததில் அமைச்சர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை மக்கள் துாக்கி காரில் ஏற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அமைச்சரின் மார்பில் இருந்து ரத்தம் கொட்டியதால், அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். துப்பாக்கியால் சுட்ட உதவி எஸ்.ஐ.,யை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஜார்சுகுடா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது மார்பு பகுதியில் இரண்டு தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து, 'ஏர் ஆம்புலன்ஸ்' வாயிலாக, புவனேஸ்வருக்கு அமைச்சர் அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்குள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது; ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதை,அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதற்கிடையே, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறுகையில், ''அமைச்சர் நாபா தாஸ் சுடப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். போலீஸ் உதவி எஸ்.ஐ.,யின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன். இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது,'' என்றார்.
அமைச்சர் சுடப்பட்ட பிரஜ்ராஜ் நகரில் பதற்றம் நிலவுகிறது. அமைச்சரின் பாதுகாப்பில் குறைபாடு இருந்ததாக, அவரது ஆதர வாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அமைச்சரை சுட்ட உதவி எஸ்.ஐ., கோபால் தாசின் மனைவி ஜெயந்தி நேற்று கூறியதாவது:
என் கணவர் கோபால் தாஸ், கடந்த சில ஆண்டுகளாகவே மனநிலை பாதிப்புக்கு ஆளாகி உள்ளார். அதற்கு அவர் சிகிச்சை பெற்று, மருந்து உட்கொள்கிறார். எல்லாரையும் போல இயல்பாகத் தான் இருந்தார்.
நேற்று காலையில் எங்கள் மகளுடன், 'வீடியோ' அழைப்பு வாயிலாக அவர் பேசினார். அமைச்சருடன் அவருக்கு எவ்வித தனிப்பட்ட விரோதமும் கிடையாது. எனவே, இந்த விவகாரத்தில் உண்மையை கண்டறிய, முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொழில்கள்
அமைச்சர் நாபா கிஷோர் தாஸ், 2019 சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்து பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார்.
சுரங்கத் தொழிலில் முதன்மை வகிக்கும் ஜார்சுகுடா மாவட்டத்தில் செல்வாக்கு பெற்ற அமைச்சர்நாபா தாஸ், நிலக்கரி சுரங்கம், போக்குவரத்து மற்றும் ஹோட்டல்கள் உட்பட பல்வேறு தொழில்கள் செய்து வந்ததாககூறப்படுகிறது.
இது தொடர்பான விஷயத்துக்காக இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட உதவி எஸ்.ஐ.,யிடம், போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.