சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை:
'குட்கா, பான்
மசாலா' போன்ற புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடையில்லை என, சென்னை உயர்
நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. பல்வேறு சமூக
சீர்கேடுகளுக்கு முழு பங்கு வகிக்கும் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை
பொருட்களை தமிழகத்தில் தடை செய்வது காலத்தின் கட்டாயம். இதற்கு நிரந்தர
தடை விதிக்க கொள்கை முடிவு எடுத்து, சட்டசபையில் தீர்மானம் இயற்றி,
சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்.
இந்த சமூக அக்கறையை அப்படியே, 'ஆன்லைன்' சூதாட்ட விளம்பரத்தில் நடிக்காமலும் காட்டலாமே!
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி: அ.தி.மு.க.,வில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதா அல்லது அ.தி.மு.க.,வுக்கு ஆதரவளிப்பதா அல்லது தேர்தலை தவிர்ப்பதா என, பா.ஜ.,வில் உறுதி செய்ய முடியாத நிலை உள்ளது. பா.ம.க.,வும் தேர்தலில் இருந்து விலகிக் கொண்டதால், கண்ணுக்கு எட்டிய துாரம் வரை எதிரிகளே இல்லாததால், தேர்தலில், தி.மு.க., கூட்டணி வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அப்புறம் ஏன், ஒட்டுமொத்த அமைச்சர் படையும், ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டிருக்கு... எல்லாரையும் ஊருக்கு திரும்ப சொல்லிடலாமே!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா பேட்டி: சமீபத்திய உயர் நீதிமன்ற உத்தரவிற்கு பின், தமிழகத்தில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யலாமா, கூடாதா என்பதை அரசு தெளிவுபடுத்தி, அரசாணை வெளியிட வேண்டும். இது தொடர்பான, வணிகர்கள் மீதான வழக்குகளை அரசு திரும்ப பெற வேண்டும்.
'புற்றுநோயை வரவழைக்கும்; இளைய சமுதாயத்தை சீரழிக்கும் புகையிலையை வணிகர்கள் விற்க வேண்டாம்'னு சொல்றது தானே உண்மையான தலைவருக்கு அழகு!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: டில்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளில், சிறந்த ஊர்தியை இணையவழி ஓட்டெடுப்பின் வழியே தேர்ந்தெடுப்பதற்கான, மத்திய அரசின் இணையதளத்தில், தமிழ்நாட்டின் பெயர், 'தமிழ்நாயுடு' என, ஆங்கிலத்தில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது; இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தின் பெயர் பிழையாக குறிப்பிட்டிருப்பதை, எழுத்துப்பிழை என்று மட்டும் கருதி, கடந்து செல்ல முடியாது. அரசின் இணையதளங்கள் அரசிதழுக்கு இணையானவை. அவற்றில் சிறிய பிழை கூட நிகழ அனுமதிக்கக் கூடாது.
எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல, மத்திய, பா.ஜ., அரசுக்கு ஆகாத ஏதோ ஒரு கறுப்பு ஆடு செய்த வேலை தான் இது... அதை கண்டறிந்து, களையெடுக்க வேண்டியது அவசியம்!