வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழுக்கு எழுதிய கடிதம்:
அ.சேகர், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: தமிழக அரசியலில், சினிமா நடிகர்களுக்கு என, தனியிடம் உண்டு. அதற்கு முதல் முறையாக வித்திட்டவர், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., இதன்பின், 'கறுப்பு எம்.ஜி.ஆர்.,' என, தன் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட விஜயகாந்த், தமிழக தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்ட போது, அவரின் கட்சியான, தே.மு.தி.க.,வின் ஓட்டு வங்கியானது, 8.34 சதவீதம் முதல், 10 சதவீதம் வரை உயர்ந்தது.
எப்போது, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தாரோ, அப்போது முதல் தன் தனித்தன்மையை விஜயகாந்த் இழந்தார். இப்போது, அவரின் கட்சி எங்கிருக்கிறது என்று, தேட வேண்டிய நிலையில் உள்ளது.
![]()
|
முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவுக்கு பின், கட்சி ஆரம்பித்தவர் நடிகர் கமல்ஹாசன். அப்போது, 'சினிமாவில் சகலகலா வல்லவனாக உள்ள கமல், அரசியலிலும் சாதிப்பார்' என்று, பலரும் நம்பினர்; அவரின் பின்னால், பிரபலங்கள் சிலரும் அணிவகுத்துச் சென்றனர்.
கடந்த, 2019 லோக்சபா மற்றும், 2021 சட்டசபை தேர்தல்களில், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்துப் போட்டியிட்டு, தமிழக வாக்காளர்களின் கவனத்தையும் ஈர்த்தது. அதனால், வரும் காலங்களில் அக்கட்சி சாதனை படைக்கும் என, கமலின் ரசிகர்களும், அவரது கட்சித் தொண்டர்களும் நம்பினர்; அந்த எண்ணத்தில், தற்போது மண்ணை போட்டு விட்டார், கமல்.
டில்லியில் சமீபத்தில் நடைபெற்ற, காங்., - எம்.பி., ராகுலின் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற கமல், 'நாட்டிற்காக, வேறுபாடுகளை களைய ராகுலுக்கு ஆதரவு' என்று கூறியது மட்டுமின்றி, தன் தந்தை காங்கிரஸ் நிர்வாகி என்றும் பேசினார். தற்போது, ஈரோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
வரும் லோக்சபா தேர்தலின் போது, தி.மு.க., - காங்., தலைமையிலான கூட்டணியில், தன் கட்சியையும் சேர்த்து, ஒரே ஒரு எம்.பி., 'சீட்'டுக்காக விலை போய் விடுவார் என்பது, கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கிய போது, 'ஒரு புதிய கட்சி, ஒரு புதிய பாதை, ஒரு புதிய கொள்கை' என, சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார், கமல்; தற்போது, அந்தக் கருத்துகளில் இருந்து சறுக்கி விட்டார். முன்னர் விஜயகாந்த் செய்ததை போன்று, கூட்டணியில் சேருவது என்ற, தவறான முடிவை எடுத்துள்ளார்.
கடந்த, 2011ல் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என்ற தவறான முடிவை எடுத்ததால், தற்போது, தன் முகவரியை இழந்து விட்டார் விஜயகாந்த். அதுபோல கமலும், விரைவில் தன் முகவரியை இழக்கப் போவது நிச்சயம். கமலின் அரசியல் நடிப்பு, இனி, தமிழக மக்களிடம் போணியாகாது.