மாதவரம்:சென்னை, மாதவரம் அடுத்த மணலி, செல்வவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகேந்திரன், 45. இவர், நேற்று முன்தினம் மதியம், மாத்துார், எம்.எம்.டி.ஏ., 3வது தெருவில் உள்ள மளிகை கடையில் உணவுப்பொருட்கள் வாங்க சென்றார்.
அப்போது, தனது 'ஹீரோ ஹோண்டா' ரக இரு சக்கர வாகனத்தை, கடை முன் நிறுத்தி சென்றார். சில நிமிடங்கள் கழித்து வெளியில் வந்து பார்த்தபோது, அவரது வாகனம் மாயமாகி இருந்தது.
இதையடுத்து நண்பரின் உதவியுடன், அக்கம்பக்கத்தில் தேடி வந்தார். இந்நிலையில், அங்குள்ள 'மெக்கானிக் ஷாப்' ஒன்றில், இவரது இரு சக்கர வாகனத்தில் இருந்து, 'நம்பர் பிளேட்'டை ஒருவர் அகற்றி கொண்டிருந்தார்.
நாகேந்திரன் உடனடியாக, மாதவரம் பால்பண்ணை போலீசில் புகார் செய்தார். அந்த கடைக்கு சென்று போலீசார் விசாரித்த போது, மாத்துாரை சேர்ந்த பாண்டியன், 32, என்பவர், 'நம்பர் பிளேட்' மற்றும் வாகனத்தின் 'சீட்' கவரை மாற்றி அமைக்க அங்கு விட்டு சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசாரின் அறிவுரைபடி, கடை ஊழியர் பாண்டியனின் மொபைல் போனில் அழைத்து, 'வாகனத்தின் பணிகள் முடிவடைந்தன. வந்து எடுத்துச் செல்லலாம்' என கூறியுள்ளார்.
இரவு 8:00 மணி அளவில், இரு சக்கர வாகனத்தை எடுக்க வந்த பாண்டியன் போலீசாரிடம் வசமாக சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், பல்வேறு திருட்டு வழக்கில் சிக்கியது தெரியவந்தது. பாண்டியனை கைது செய்த போலீசார், இரு சக்கர வாகனத்தைபறிமுதல் செய்தனர்.