நங்கநல்லுார்:சென்னை, நங்கநல்லுார் பிரின்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவாரி சீனியர் செகண்டரி பள்ளி ஆகியவற்றில், மாணவர்களின் அறிவியல், கலை மற்றும் கைவினை கண்காட்சி -2023 நிறைவு விழா நடந்தது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:
பிரின்ஸ் பள்ளி குழுமத்தில், 19 ஆயிரம் மாணவ - மாணவியர் படிக்கின்றனர். 800 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. சமுதாய நலனுக்காக 44 ஆண்டுகளாக இயங்குகிறது.
தமிழக அரசும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, 35 சதவீத நிதி ஒதுக்கியுள்ளது. நெல் பயிர் ஓராண்டில் பலன் தரும். மரம் 10 ஆண்டுகளில் பலன் தரும். ஆனால் கல்வி, 100 ஆண்டுகளுக்கு பலன் தரும். அத்தகைய சிறப்பு வாய்ந்த கல்வியை வாசுதேவன் வழங்கி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து, 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த, கண்காட்சியில் சிறந்த படைப்புகளை அளித்து முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ - மாணவியருக்கு அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் எம்.பி., ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பரிசு வழங்கி கவுரவித்தனர்.
விழாவில், பிரின்ஸ் பள்ளி குழும தலைவர் வாசுதேவன், சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார்.
ஆலந்துார் மண்டல குழு தலைவர் சந்திரன், செங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, பிரசிடன்சி கல்லுாரி முதல்வர் ராமன், பள்ளி துணை தலைவர்கள் விஷ்ணு கார்த்திக், பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
வார்டு கவுன்சிலர் தேவி ஜேசுதாஸ், வெங்கடேஷ்வரா பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியை ரஞ்சனி வாசுதேவன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.