கோயம்பேடு:கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரித்ததால் விலை சரிந்துள்ளது. அதே நேரம், முருங்கைக்காய் சதத்தை கடந்தும், வெண்டைக்காய் அரை சதத்தை கடந்தும் விற்பனையானது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் காய்கறி வரத்து உள்ளது.
அதேபோல், மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்டவை விற்பனைக்கு வருகின்றன.
தற்போது, பனிப்பொழிவால் பல மாவட்டங்களில் காய்கறி விளைச்சல் அதிகரித்துள்ளது.
இதனால், கோயம்பேடு சந்தைக்கு தினமும் 55 லட்சம் கிலோ காய்கறி வந்த இடத்தில், தற்போது 70 லட்சம் கிலோ காய்கறிகள் வருகின்றன.
வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை வெகுவாக குறைந்துள்ளது.
அதேநேரம், வரத்து குறைவால் முருங்கைக்காய் கிலோ 100 -- 120 ரூபாய்க்கும், வெண்டைக்காய் கிலோ 55 -- 60 ரூபாய்க்கும் விற்பனையாகின.
கடந்த வாரம், கிலோ 80 -- 90 ரூபாய்க்கு விற்பனையான சின்ன வெங்காயம், நேற்று கிலோ 30 -- 60 ரூபாய்க்கு விற்பனையானது.