தேனி மாவட்டம், பெரியகுளம், வடகரையைச் சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக், 35; மளிகை வியாபாரி. இவரது மனைவி ரம்ஜான்பேகம், 33. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்; இரு மகள்கள் உள்ளனர். ஜன., 27ல் ரம்ஜான் பேகம் இறந்தார். அவர், உடல்நிலை சரியில்லாமல் இறந்ததாக அபுபக்கர் சித்திக், உறவினர்களிடம் தெரிவித்தார். நேற்று முன்தினம் காலை உடல் அடக்கம் செய்ய உறவினர்கள் தயாராகினர்.
இறந்த ரம்ஜான் பேகத்தின் தாய் பாத்திமா, மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக போலீசில் புகார் செய்தார். வடகரை போலீசார் வழக்குப் பதிவு செய்து, தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு உடலை பரிசோதனைக்கு அனுப்பினர். அங்கு, ரம்ஜான் பேகம், கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரிந்தது.
இன்ஸ்பெக்டர் மீனாட்சி கூறியதாவது: கணவர் அபுபக்கர் சித்திக், வேறு சில பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதை தட்டிக்கேட்ட மனைவி ரம்ஜான் பேகத்துடன் அவருக்கு தகராறு ஏற்பட்டது. அவர் முகத்தில் தாக்கி, தலையணையால் அழுத்தி, மூச்சுத்திணறல் ஏற்படுத்தி, கொலை செய்தேன் என, போலீசில் அபுபக்கர் சித்திக் தெரிவித்துள்ளார். கொலை உறுதியானதால் அவரை கைது செய்துஉள்ளோம். இவ்வாறு கூறினார்.
ரூ.25 லட்சம் தங்கத்துடன் மே.வங்க வாலிபர் ஓட்டம்
கோவை, ஆர்.எஸ்.புரம், பொன்னுரங்கம் சாலையில், பரஸ்நாத் ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைப்பட்டறை நடத்தி வருபவர் பியூஷ் ஜெயின், 35. இவரிடம், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சதாம் உசேன், 28, ஆபரணம் செய்யும் வேலையில் இருந்தார்.
கடந்த, 27 மாலை, 621 கிராம் தங்கத்தை சதாம் உசேனிடம் கொடுத்த பியூஷ் ஜெயின், ஆபரணம் செய்யுமாறு கூறினார். அதை வாங்கிய சதாம் உசேன், சற்று நேரத்தில் மாயமாகி விட்டார்.
அவரிடம் கொடுத்த தங்கமும் பட்டறையில் இல்லை. அதிர்ச்சியடைந்த பியூஷ் ஜெயின், பல இடங்களில் தேடியும், மொபைல் போனில் அழைத்தும் பலனில்லை. தன்னிடம் பெற்ற, 25 லட்சம் ரூபாய் மதிப்பு தங்கத்துடன், சதாம் உசேன் தப்பி விட்டதாக பியூஷ் ஜெயின், போலீசில் புகார் அளித்தார். ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா கடத்தி வந்து விற்பனை; குடும்பமே கைது
நீலகிரி மாவட்டம், கூடலுார் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி, 47. இவரது மகன் ரஞ்சித்குமார், 24; மகள்கள் சிவரஞ்சனி, 27; ரஞ்சிதா, 26; மருமகன் பிரபு, 38. இவர்கள், ஆந்திராவிலிருந்து, 6 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து, வீட்டில் வைத்து விற்பனை செய்ய முயன்றனர். இவர்களை கூடலுார் போலீசார் கைது செய்தனர்.
மேலும், விற்பனைக்கு உடந்தையாக இருந்த திருச்சி அருண்பாண்டி, 26 மற்றும் சபரிமணி, 25, ஆகிய இருவரையும் கைது செய்து, 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட டூ - வீலர் மற்றும் 26 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே கஞ்சா கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளது.
நள்ளிரவில் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த ஆவுடையார்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், 42. இவர், சென்னையில் இன்ஜினியரிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரது உறவினரான நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மனைவி ஷீலா, 53; அவரது மகன் வினோத்குமார், 30. ஸ்ரீதருக்கும், இவர்களுக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்தது.
![]()
|
இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் ஷீலா, வினோத்குமார் ஆகியோர், ஆவுடையார்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குமரன் உட்பட சிலருடன், ஸ்ரீதர் வீட்டிற்கு சென்று பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இது குறித்து, குமரன், வினோத்குமார், ஷீலா மீது விக்கிரவாண்டி போலீசில் ஸ்ரீதர் புகார் கொடுத்தார். நேற்று முன்தினம் இரவு, ஸ்ரீதர் குடும்பத்துடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு, 12:00 மணிக்கு வீட்டின் முன் கண்ணாடி பாட்டில்கள் உடையும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தார்.
அப்போது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பைக்குகள் எரிந்தன. அதிர்ச்சியடைந்த ஸ்ரீதர், சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விக்கிரவாண்டி போலீசார் விசாரிக்கின்றனர். பெட்ரோல் குண்டு வீச்சில் இரு பைக்குகள் முற்றிலுமாக எரிந்தன. நள்ளிரவில் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மனைவி கொலை; கணவன் கைது
நீலகிரி மாவட்டம், மசினகுடியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 33; பனியன் தொழிலாளி. நீலகிரி மாவட்டம், மாயாறு பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா, 28. இவர்கள், 10 ஆண்டுகளுக்கு முன், காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின், திருப்பூர் வந்து, முதலிபாளையம், 'சிட்கோ' அருகே தங்கி, பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.
சில மாதங்களாக, தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தனியே தங்கியிருந்த மணிகண்டன், நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்தார். தம்பதி இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால், ஆத்திரமடைந்த மணிகண்டன், மனைவியை கத்தியால் குத்தினார். தடுக்க வந்த மாமியார் மாதேவியையும் தாக்கி, 'டூ - வீலரில்' தப்பினார்.
பொதுமக்கள், '108' ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். மருத்துவக்குழுவினர் பரிசோதித்த பார்த்தபோது, சுஜாதா இறந்தது தெரிந்தது. மாதேவி அளித்த புகாரின் படி, ஊத்துக்குளி போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
வாலிபருக்கு 'போக்சோ'
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த கரிக்காத்துாரைச் சேர்ந்தவர் முருகன், 24; பெங்களூரில் சமையல் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர், 15 வயது சிறுமியை மிரட்டி சில மாதங்களுக்கு முன் பலாத்காரம் செய்தார்.
இரண்டு நாட்களுக்கு முன் உடல் நலம் பாதித்த சிறுமியை, அவரது பெற்றோர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர் பரிசோதனையில் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. போளூர் அனைத்து மகளிர் போலீசில், பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தில் முருகனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
மூதாட்டியை கொன்று 15 சவரன் கொள்ளை
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகேயுள்ள குணகரம்பாக்கம் ஊராட்சி மேலேரி கிராமத்தை, சேர்ந்த யசோதா, 80, தனியாக வீட்டில் வசித்து வந்தார். அவர் தனியாக வசிப்பதை அறிந்த மர்ம நபர்கள், வீடு புகுந்து அவரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து, பீரோவில் இருந்த, 15 சவரன் நகைகளை கொள்ளையடித்தனர். போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
விமானத்தில் அவசரகால கதவை திறக்க முயன்றவர் மீது வழக்கு
'இண்டிகோ' விமானத்தில் நடுவானில் அவசர கால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது. சக பயணியரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக, அந்த பயணி மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நீதிமன்ற விசாரணையை படம் பிடித்த பெண் கைது
மத்திய பிரதேசத்தில், மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணையை, 'மொபைல் போனில்' படம்பிடித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவருக்கு, 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
வரி ஏய்ப்பு: பிரிட்டன் மந்திரி பதவி பறிப்பு
வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கிய பிரிட்டன் அமைச்சரும், பழமைவாத கட்சியின் தலைவருமான நதிம் ஸஹாவியை பதவி நீக்கம் செய்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நேற்று உத்தரவிட்டார்.