வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி பத்திரங்கள் தொடர்பான கிரிமினல் வழக்குகளில், நீதிமன்றங்கள் கிடுக்கிப்பிடி போடுவதால், மாவட்ட பதிவாளர்கள் அலறும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் போலி மற்றும் மோசடி பத்திரப் பதிவுகளை தடுக்கும் வகையில், பதிவு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. அதில், மோசடி பத்திரங்களை ரத்து செய்ய, மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் தரப்பட்டு உள்ளது. மோசடி நடந்தது கிரிமினல் வழக்கில் உறுதியானாலும், பத்திர ரத்துக்காக உரிமையியல் நீதிமன்றங்களுக்கு, மாவட்ட பதிவாளர்கள் செல்ல வேண்டியதில்லை.
இருந்தாலும், ஆள்மாறாட்டம் வாயிலாக, சொத்துக்கள் அபகரிக்கப்பட்ட புகார்களில், தற்போது, மாவட்ட பதிவாளர்களை எதிர்வாதியாக நீதிமன்றங்கள் சேர்ப்பதால், அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
![]()
|
இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆள்மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகள் தொடர்பான கிரிமினல் வழக்குகளில், பதிவுத்துறை சார்பில் ஆஜராக வேண்டிய எதிர்வாதியாக மாவட்ட பதிவாளர்கள் சேர்க்கப்படுகின்றனர். இது, சட்ட நடைமுறை தான் என்றாலும், இது தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள், உடனுக்குடன் மாவட்ட பதிவாளர்களுக்கு வருவதில்லை.
மிக குறுகிய கால அவகாசத்தில், சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பான முழு விபரங்களை எடுத்து, நீதிமன்றத்துக்கு உரிய பதில் அளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதுபோன்ற வழக்கு நிலவரங்களை, மாவட்ட பதிவாளர்கள் உடனுக்குடன் அறியவும், அவற்றை கையாளவும், உரிய ஏற்பாட்டை பதிவுத்துறை மேற்கொள்ள வேண்டும்.
தகவல்கள் வருவதில் தாமதமாவதால், பல இடங்களில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு, மாவட்ட பதிவாளர்கள் ஆளாகும் நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.