சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல், நாளை(ஜன.,31) துவங்க உள்ளதை தொடர்ந்து, கட்சியினர் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா., மறைவை தொடர்ந்து, பிப்., 27ல், இடைத்தேர்தல் நடக்கும் என, தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. தி.மு.க., கூட்டணி சார்பில், காங்., மீண்டும் போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளராக, காங்கிரஸ் மூத்த தலைவர் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க., சார்பில் வேட்பாளரை நிறுத்தப் போவதாக பன்னீர்செல்வமும், பழனிசாமியும் தனித்தனியே அறிவித்துள்ளனர். தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களையும் நியமித்துள்ளனர்.
தே.மு.தி.க., சார்பில், அக்கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலர் ஆனந்த் களமிறக்கப்பட்டு உள்ளார். தினகரனின், அ.ம.மு.க., சார்பில், சிவபிரசாத் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில், மேனகா என்பவர், நேற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சிறிய கட்சிகளும், சுயேட்சைகளும் போட்டியிட ஆர்வமாக உள்ளன.
![]()
|
தேர்தல் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு உத்தரவிட்டுள்ளார். வேட்பு மனுதாக்கல் நாளை துவங்குவதால், தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கி விடும்.
தி.மு.க., சட்டத்துறை செயலர், என்.ஆர்.இளங்கோ எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்காக பணியாற்றும் கட்சி நிர்வாகிகளுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் உதவிடும் வகையில், தி.மு.க., சட்டத்துறை இணைச் செயலர்கள் பரந்தராமன் எம்.எல்.ஏ., - ஈரோடு ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் அர்ஜுன் ஆகியோர் தலைமையில், தி.மு.க., வக்கீல்கள் அடங்கிய, 'வார்ரூம்' அமைக்கப்படுகிறது.தேர்தல் பணியாற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள், தேர்தல் குறித்த சட்ட பிரச்னைகள் தொடர்பாக, உடனுக்குடன் இவர்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.