வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்து, கவுன்சிலர்கள் தலைமையில் நிர்வாகம் துவங்கி ஓராண்டு நெருங்கும் நிலையில், சென்னை குடிநீர் வாரியத்தில், வார்டு மறுவரையறை அடிப்படை ஆவணங்களில் மாற்றம் செய்யவில்லை. இதனால், புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம், அலைக்கழிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால், வரி செலுத்துவோர் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர்.

சென்னை குடிநீர் வாரியம், 15 மண்டலம், 200 வார்டுகளுக்கு, தினமும், 100 கோடி லிட்டர் குடிநீர் வழங்குகிறது. இதற்காக, 5,300 கி.மீ., துாரம் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது.
குடிநீர் வினியோகம் தாமதம், குழாய் உடைப்பு, வீணாக செல்வது, கழிவு நீர் அடைப்பு, வெளியேற்றம் போன்ற புகார்கள் தெரிவிக்க, குடிநீர் வாரியம் பல வசதிகள் செய்துள்ளன.
வார்டு, மண்டல பகுதி பொறியாளர், தலைமை அலுவலக அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கும் வகையில், ஒவ்வொருவருக்கும் தனித்தனி மொபைல் எண்கள் வழங்கப்பட்டு உள்ளது.
தவிர, 044- - 4567 4567 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதில், 20 இணைப்புகள் உள்ளன. அதேபோல, கட்டணமில்லாமல், '1916' என்ற எண்ணில் அழைக்கலாம்.
மேலும், www.chennaimetrowater.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் புகார் அளிக்கும் வசதி உள்ளது. சமூக வலைதளத்தில் தெரியப்படுத்த 'டுவிட்டர், பேஸ்புக்' இ- - மெயில் மற்றும் 'க்யூஆர்கோடு' போன்ற வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.
முதல்வர் தனிப்பிரிவில் அளிக்கும் புகார்கள், அந்தந்த வார்டு இளநிலை பொறியாளர்களுக்கு தெரிவிக்கப்படும். புகார் தெரிவிப்பவர், மண்டலம் எண், வார்டு எண், தெரு பெயர், கதவு எண் உள்ளிட்ட முகவரியை தெளிவாக தெரிவிக்க வேண்டும்.

இதன் அடிப்படையில், அதிகாரிகள் கள நிலவரம், ஆவணங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பர்.
சென்னை மாநகராட்சியில், மக்கள் தொகை பரப்பு அடிப்படையில் வார்டுகள் அமையாததால், சீரான நிர்வாகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால், வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டன. இதன் அடிப்படையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது.
ஆனால், தேர்தல் முடிந்து, கவுன்சிலர்கள் தலைமையில் நிர்வாகம் துவங்கி, ஓராண்டு நெருங்கும் நிலையில், வார்டு வரையறை அடிப்படையில், பொதுமக்களுக்கு சேவை வழங்கும் பணி முழுமை பெறவில்லை.
ஒவ்வொரு வார்டிலும் சில தெருக்கள், பக்கத்து வார்டில் சேர்க்கப்பட்டன. இது குறித்த முழு விபரங்களை, குடிநீர் வாரிய ஆவணங்களில் மாற்றம் செய்யவில்லை. வரையறைக்கு முன்பிருந்த வார்டுகள் அடிப்படையிலே செயல்படுகிறது.
இதனால் பொதுமக்கள், வரையறை வார்டு அடிப்படையில் தெரிவிக்கும் புகார்கள், அதே வார்டு அதிகாரிக்கு செல்லாமல், பழைய வார்டு எண் உடைய அதிகாரிக்கு செல்வதால், நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.
மேலும், வரி, கட்டணம் செலுத்துவது, அதில் உள்ள குளறுபடி, முகவரி மாற்றம், புதிய இணைப்பு பெறுதல் போன்ற பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, குடிநீர் வாரியத்திற்கு, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதன்படி, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர், செப்., மாதம் ஒரு உத்தரவு பிறப்பித்தார்.
அதில், அக்., 1ம் தேதி முதல், மறுவரையறை அடிப்படையில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
ஆனால், உத்தரவு பிறப்பித்து, நான்கு மாதம் ஆகியும், பழைய வார்டுகள் அடிப்படையில் நிர்வாகம் செயல்படுகிறது. மொத்தமுள்ள, 200 வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்ட விபரங்கள் அடிப்படையில், வாரிய இணைய ஆவணங்களில் மாற்றம் செய்ய வேண்டும்.
இந்த பணியை, குடிநீர் வாரிய தொழில்நுட்ப பிரிவு செய்ய வேண்டும். நிர்வாக குளறுபடி, ஊழியர் பற்றாக்குறை, தலைமை அலுவலகம் இடமாற்றம் போன்ற காரணத்தால், மறுவரையறை வார்டு விபரங்கள் சேர்க்கை பணி, கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இதனால், பொதுமக்கள் தங்கள் தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய முடியாமல் திணறுகின்றனர். மேலாண்மை இயக்குனர், மீண்டும் தலையிட்டு, வார்டு மறுவரையறை அடிப்படையில் வாரியம் பணிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
இரு நாள் ஆகிறது
வார்டு மறுவரையறை அடிப்படையில், மாநகராட்சியின் சேவைகளை பெறுகிறோம். அதன் அடிப்படையில், குடிநீர் வாரிய சேவைகளை பெறமுடியவில்லை. குடிநீர் வினியோகம், கழிவுநீர் அடைப்பு குறித்த சாதாரண புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க, இரண்டு நாள் வரை ஆகிறது. அதிகாரிகளிடம் கேட்டால், பக்கத்து வார்டு அதிகாரி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலைக்கழிக்கின்றனர். வரி செலுத்த தாமதமானால் உடனடியாக வீடு தேடி வருவதில் அதிகாரிகளுக்கு தாமதம் ஏற்படுவதில்லை.
-வரி செலுத்துவோர்
ஒப்படைத்துவிட்டோம்
வார்டு மறுவரையறை குறித்த தகவல்கள், எத்தனை தெருக்கள் மாறியது? தெருக்கள் பெயர், அதன் வார்டு எண்கள் போன்ற முழு விபரங்களை, குடிநீர் வாரிய பகுதி பொறியாளர்களிடம் ஒப்படைத்து பல மாதம் ஆகிறது. அவர்கள் தான், வாரிய ஆவணங்களில் மாற்றம் செய்ய வேண்டும்.
- மாநகராட்சி அதிகாரிகள்
எந்த பயனும் இல்லை
வார்டு மறுவரையறை அடிப்படையில், ஒவ்வொரு வார்டிலும், 20 சதவீதம் தெருக்களை பிரித்து, பக்கத்து வார்டில் சேர்க்கப்பட்டு உள்ளன. இந்த தெருக்களுக்கு, வார்டு எண்கள் மாறும். இதன் அடிப்படையில், பொதுமக்களுக்கு பணி செய்ய வேண்டும். மாநகராட்சியில் எந்த பிரச்னை இல்லாமல், பணி நடக்கிறது? எங்களுக்கு, வரையறை அடிப்படையில் வார்டுகள் பிரிக்காததால், பொதுமக்களின் தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய முடியவில்லை. உயர் அதிகாரிகளிடம் கூறியும் எந்த பயனும் இல்லை.
- குடிநீர் வாரிய அதிகாரிகள்