வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சேலம்: சேலத்தில் நடந்த சர்வதேச கண்காட்சியில், 200க்கும் மேற்பட்ட பூனைகள் பங்கேற்றன. பல 'மியாவ்'கள் தோற்றத்தால், பார்வையாளர்களை பரவசப்பட வைத்தன.

'ஹூரைரா கேட் பான்சியஸ், கேட் கிளப் ஆப் இந்தியா' இணைந்து, சேலத்தில் சர்வதேச பூனைகள் கண்காட்சியை நேற்று நடத்தின. தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பூனைகள் பங்கேற்றன.
'பெங்கால் டைகர், பெர்சியன் லாங் ஹேர், எக்ஸோடிக் வெரைட்டி, சியாமிஸ், நைஜீரியன்' உட்பட, 20 வகைகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட பூனைகளை இதில் பங்கேற்க செய்தனர்.
பூனை இனம், வளர்ப்பு, பராமரிப்பு, முடியின் வகை, நகம் உள்ளிட்டவை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதை தொடர்ந்து முதல் மூன்று இடங்களை பிடித்த பூனைகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பூனைகளுக்கான உணவு, சான்றிதழ், பரிசு கோப்பை வழங்கப்பட்டது. புசுபுசுவென்று காணப்பட்ட பல பூனைகளை, பெண்கள் மற்றும் குழந்தைகள் ரசித்து பார்த்தனர்.

இது குறித்து கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் முகமது ரப்பானி, மசூத் கூறுகையில், 'கண்காட்சியில், 5,000 முதல் 5 லட்சம் ரூபாய் மதிப்பில், 200க்கும் மேற்பட்ட பூனைகள் பங்கேற்றன. பூனை வாங்க நினைக்கும் மக்கள், வளர்ப்பவர்களிடம் சந்தித்து பேசி பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டது' என்றனர்.