வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராமேஸ்வரம்: கிராம கோவில்களில் பணிபுரியும் பூஜாரிகளுக்கு மாத ஊக்கத் தொகையாக தமிழக அரசு ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும், என கிராம பூஜாரிகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில் கிராம கோவில் பூஜாரிகள் பேரவை,அருள்வாக்கு அருள்வோர் பேரவையின்மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. தமிழ்நாடு வி.எச்.பி., நிறுவனத் தலைவர் எஸ்.வேதாந்தம் தலைமை வகித்தார். வி.எச்.பி., மாநில தலைவர் ஆர்.ஆர். கோபால் ஜி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தில், 2021ல் தி.மு.க., சட்டசபை தேர்தல் அறிக்கையில் கிராம கோவில் பூஜாரிகளுக்கு மாத ஊதியம் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என கூறியது. இன்று வரை அமல்படுத்தவில்லை. எனவே அனைத்து பூஜாரிக்கும் ஊக்கத்தொகையாக மாதம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும்.
சிறுபான்மையர் வழிபாட்டு தலத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு வழங்கிய ஓய்வூதியம், அவரது மறைவிற்கு பின் மனைவிக்கு வழங்குவது போல், கோவில் பூஜாரிகள் மறைவுக்கு பின் மனைவிகளுக்கு வழங்க வேண்டும்.

2001 மார்ச்சில் அப்போதைய முதல்வர் கருணாநிதி கிராம கோவில் பூஜாரிகள் நல வாரியம் அமைத்து, இதுவரை செயல்படாமல் முடங்கி உள்ளது. அதனால் பல மாவட்டங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கை, பழைய உறுப்பினர் புதுப்பித்தல் நடக்கவில்லை. புதிய நலவாரிய குழு அமைத்து, விண்ணப்பிக்கும் முறையை எளிமைபடுத்த வேண்டும்.
சிறுபான்மையர் தலங்களுக்கு மின் கட்டணம் குறைவாகவும், கிராம கோவிலுக்கு அதிகமாகவும் உள்ளது. தமிழகத்தில் ஹிந்து கோவில்கள் மூலம் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வந்தும், பல கிராம கோவில்களில் ஒரு விளக்கு கூட எரிய வசதி இல்லாத நிலை உள்ளது. எனவே அனைத்து கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.
பூஜாரிகள் மாத ஓய்வூதியம் பெற ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 72 ஆயிரமாக உள்ளது. ஆனால் வருவாய் ஆய்வாளர்கள் சான்று தருவது இல்லை. எனவே வறுமையில் வாடும் வயது மூத்த பூஜாரிகளுக்கு ஓய்வு ஏதும் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே ஆண்டு வருவாய் உச்ச வரம்பை ரூ. 1 லட்சமாக உயர்த்த வேண்டும். இக்கோரிக்கையை நிறைவேற்ற கோரி மார்ச் 13ல் அனைத்து மாவட்ட தலைநகரத்தில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடக்க உள்ளது, என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.