சென்னை: முதல்வர் ஸ்டாலின் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு ஒருபுறம் நடக்க, சேலத்தில் திமுக ஒன்றிய செயலாளர் ஒருவர், பட்டியலின இளைஞர் கோவிலுக்குள் நுழைந்ததற்காக ஆபாச வார்த்தைகளால் திட்டிய வீடியோ வைரலாகியுள்ளது.
தியாகிகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது. நிகழ்வில் தலைமைச் செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இது ஒருபுறம் இருக்க சேலத்தில் பட்டியலின இளைஞர் கோவிலுக்குள் நுழைந்ததால், ஊர் மக்கள் முன்னிலையில் திமுக ஒன்றிய செயலாளர் ஒருவர் ஆபாசமாக திட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

சேலம் மாவட்டம் திருமலைகிரி பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்குள் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த இளைஞரை திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம், கோவிலுக்குள் அவர் சென்றதை கண்டித்து ஊர் மக்கள் முன்பு நிற்கவைத்து ஆபாசமாக வசைப்பாடியுள்ளார். திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் கொச்சையாக இளைஞரை திட்டிய வீடியோ வைரலாக பரவியது.

சமூகநீதி, தீண்டாமை ஒழிப்பு பற்றி பேசிவரும் திமுக.,வினரே இப்படி தீண்டாமையை கடைபிடிப்பது வெட்கக்கேடு என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். திமுக ஒன்றிய செயலாளரின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சஸ்பெண்ட்
இந்த வீடியோ வைரலான நிலையில், சேலம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கத்தை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
வழக்குப்பதிவு
இந்த விவகாரம் தொடர்பாக அந்த பட்டியலின இளைஞர் கொடுத்த புகாரின் பேரில், மாணிக்கம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து மாணிக்கத்தை போலீசார் கைது செய்தனர். அப்போது கைது செய்ய கூடாது என அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.