சென்னை: திமுக எம்.பி.,யும், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளருமான கனிமொழி, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தற்போது தேர்தல் அறிக்கையில் நாங்கள் மதுவிலக்கு பற்றி கூறவில்லை என 'பல்டி' அடித்துள்ளது விமர்சனத்திற்குள்ளானது.
திமுக துணை பொதுச்செயலாளராக உள்ள கனிமொழி, சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பொதுக்கூட்டம், பிரசாரத்தில் பேசியபோது, திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என உறுதியளித்திருந்தார்.
தேர்தலுக்கு முன்பு, மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில் பெண்களுக்கு மத்தியில் கனிமொழி பேசுகையில், 'தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பெண்ணின் கோரிக்கையும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், மதுவை ஒழிக்க வேண்டும் என்பதே. இதுதான் அவர்களின் மிகமுக்கிய கோரிக்கை. நிச்சயமாக, உறுதியாக அதை செய்வேன். திமுக ஆட்சிக்கு வந்ததும் தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆனதும் முதல் கையெழுத்து மதுவிலக்கிற்கான கையெழுத்தாக இருக்கும்' என பேசியிருந்தார்.

அதேபோல், வேறொரு நாளில் செய்தியாளர்களிடம் கனிமொழி பேசுகையில், 'உடல்நிலை பாதிக்கப்படாத அளவிற்கு மதுவிலக்கு கொள்கை அமல்படுத்தப்படும்' எனத் தெரிவித்திருந்தார். இது மட்டுமல்லாமல், பல நிகழ்ச்சிகளில் மதுவிலக்கு தொடர்பான வாக்குறுதியை அவர் அளித்திருந்தார். இப்படியிருக்கையில் சமீபத்தில் விருதுநகரில் செய்தியாளர்களிடம் அவர், 'மதுவிலக்கு கொண்டு வருவோம் என நாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறவில்லை, மதுவிற்பனை குறைக்கப்படும் என்றே வாக்குறுதி அளிக்கப்பட்டது' எனக் கூறியுள்ளார்.
தேர்தலுக்கு முன்பாக ஆட்சிக்கு வருவதற்காக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என ஒவ்வொரு மேடையிலும், நிகழ்ச்சியிலும் பேசி வந்த கனிமொழி, தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியில் திமுக அமர்ந்தபிறகு, தனது நிலைபாட்டை மாற்றி, மதுவிலக்கு எனக் கூறவில்லை, விற்பனை குறைப்போம் என்றே வாக்குறுதி அளித்ததாக பேசியுள்ளது பெண்கள் மட்டுமல்லாமல் மதுவிலக்கை எதிர்நோக்கும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலுக்கு முன்பாக மதுவிலக்கு குறித்து வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றிவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.