காங்கேயம்: சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோயிலில் தைப்பூச தேர்த் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் விழா நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை, சுப்ரமணியசுவாமி கோயிலின் தைப்பூச தேர்த் திருவிழா, கடந்த 27ம் தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோயிலில் தேர் திருவிழாவுடன் நிகழ்சிகள் துவங்கியது. இன்று(ஜன.,30) வீரகாளியம்மன் மலைக்கோயிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின் சிறப்பு பூஜையும், மயில் வாகன அபிஷேகமும், விநாயகர் வழிபாடும் நடைபெற்றது. முருகன் கோயில் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. சுப்ரமணியர், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் சப்பாரத்தில் மலையை வலம் வந்த்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தேரோட்டம் 5ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6:00 மணிக்கு மகர புஷ்ய நல்லோரையில் சுவாமி ரதத்திற்கு எழுந்தருளுகிறார். அன்று மாலை 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் துவங்குகிறது. 6,7 ம், தேதிகளில் மலையை வலம் வந்து நிலை அடைகிறது.
10ம் தேதி தெப்ப உற்சவம் பரிவேட்டை நடைபெறுகிறது. 11ம் தேதி மதியம் 12:00 மணிக்கு மஹா தரிசனம் நடைபெறுகிறது. 14ம் தேதி இரவு கொடியிறக்குதல் மற்றும் பாலிகை நீர்த்துறை சேர்த்தலுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது. தேர்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.