வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: ஏவுகணைகளை வைத்து புதின் தன்னை மிரட்டுவதாக பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனர் பிரதமர் பதவியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர், போரிஸ் ஜான்சன் விலகியிருந்தார். இந்த நிலையில், ஆவணப்படம் ஒன்றிற்காக பிபிசி செய்தி நிறுவனத்திற்கு போரிஸ் ஜான்சன் அளித்த பேட்டியில் ரஷ்ய - உக்ரைன் போர் குறித்தும், ரஷ்ய அதிபர் புதின் குறித்து பேசிய கருத்தும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியுள்ளதாவது:
உக்ரைன் மீது படையெடுத்தால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்கும், நேட்டோ படைகள் ரஷ்யாவின் எல்லைகளுக்குள் நுழைவதற்கும் வழிவகுக்கும் என்று 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதமே புதினுக்கு நான் எச்சரிக்கை விடுத்தேன்.

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை தடுப்பதற்காக உக்ரைன் எதிர்காலத்தில் நேட்டோவில் சேராது என்றும் நான் புதினிடம் கூறினேன். ஆனால் ஒரு கட்டத்தில் புதின் என்னை மிரட்ட ஆரம்பித்தார். 'போரிஸ் ஜான்சன், நான் உங்களை காயப்படுத்த விரும்பவில்லை, ஆனால், ஏவுகணை மூலம் அது ஒரு நிமிடம் நிகழலாம்' என மிரட்டினார். இவ்வாறு அவர் கூறியிருந்தார். இது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.