ஊட்டி: கூடலூர் பகுதியில் யானை தாக்கி மனிதர்கள் உயிரிழந்து வருவதை தடுக்க அதி நவீன தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட கலெக்டர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் ஓவேலி பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு பேரை காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவத்தில் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இறந்தவரின் உடலை எடுக்காமல் அப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று மாவட்ட கலெக்டர் அம்ரித் செய்தியாளர்களிடம் கூறுகையில், கூடலூர் பகுதியில் மனித - வனவிலங்குகள் மோதல் ஏற்பட்டு மனித உயிர்கள் பலியாகி வரும் நிலையில் இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், எதிர்காலத்தில் உயிர் பலியாகமல் இருக்க வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியே வராமல் தடுக்க பிரத்யேக வரைபடம் மூலம் 5 இடங்களில் அதிநவீன தடுப்புகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் மக்கள் அச்சமின்றி இருக்க வேண்டும் எனவும், அதற்க்காக வனத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளதாவும் தெரிவித்தார். வாட்ஸ்ஆப் மூலம் வதந்திகள் பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் கழிப்பிட வசதிகள் செய்து தரப்படும் என்றார்.