கூடலூர்: கூடலூரில், வீட்டு வரி நிர்ணயம் செய்ய, 11 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற, நகராட்சி வருவாய் உதவியாளர் உட்பட இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.நீலகிரி மாவட்டம், கூடலூர் தொரப்பள்ளியைசேர்ந்த நபர், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம், வீடு கட்டி உள்ளார். அந்த வீட்டுக்கு வரி நிர்ணயம் செய்வதற்காக, கூடலூர் நகராட்சி வருவாய் உதவியாளர் ஸ்ரீஜீத், 36, என்பவரை தொடர்பு கொண்டுள்ளனர் .
இதற்காக, ஸ்ரீஜீத் அவரிடம் 11 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் மகன், இதுகுறித்து ஊட்டி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி, வீட்டு உரிமையாளர் மகன் இன்று (ஐன., 30), இரவு கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் வைத்து ஸ்ரீஜீத்திடம், 11 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார். அங்கு மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்புதுறை இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி தலைமையில் எஸ்.ஐ., ரங்கநாதன் மற்றும் போலீசார். ஸ்ரீஜித்தையும், அவர் தனக்கு உதவியாக (தனியாக) வைத்திருந்த ரமேஷ், 35, என்பவரை கைது செய்து, பணத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் விசாரனை மேற்கொண்டனர். இச்சம்பவம்,
கூடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.