திருப்பூர்: வட மாநில தொழிலாளர்கள் விரட்டி தாக்கியதாக பரவிய, 'வீடியோ' தொடர்பாக, பீஹாரைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர், அனுப்பர்பாளையம், திலகர் நகரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில், நுாற்றுக்கும் மேற்பட்ட வட மாநிலத்தினர் தங்கி வேலை செய்கின்றனர்.
'தமிழர்களை வட மாநிலத்தினர் அடித்து விரட்டுகின்றனர்' என்ற தகவலோடு, 26ம் தேதி, வீடியோ பரவியது. இது குறித்து, வேலம்பாளையம் போலீசார் விசாரித்தனர்.
நிறுவனத்துக்கு அருகிலுள்ள பேக்கரிக்கு, 14ம் தேதி டீ குடிக்க சென்றபோது, இருதரப்புக்கு தற்செயலாக ஏற்பட்ட பிரச்னை குறித்த வீடியோ, தவறான தகவலுடன் பரப்பப்பட்டது தெரிந்தது.
இதற்கிடையே, மோதல் தொடர்பாக பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ரஜத்குமார், 24; பரேஷ்ராம், 27 ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, எதிர் தரப்பைச் சேர்ந்த தமிழக வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வீடியோவை பரப்பியவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.