தண்டராம்பட்டு : தண்டராம்பட்டு அருகே, ஆலய நுழைவு போராட்டம் நடத்திய ஆதி திராவிடர்கள், கலெக்டர் தலைமையில் கோவிலுக்குள் அழைத்துச் சென்று வழிபாடு செய்ய வைக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனுாரில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, 70 ஆண்டுகள் பழமையான முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில், இதே பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்களை, கோவில் கட்டியதில் இருந்து இதுவரை, வழிபாடு நடத்த, மற்றொரு தரப்பினர் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து, ஆதிதிராவிடர் தரப்பினர், அக்கோவிலிற்குள் சென்று வழிபாடு நடத்த, மாவட்ட நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறையினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம், எதிர்ப்பு தெரிவித்த தரப்பினரிடம் பேச்சு நடத்தியும், அவர்கள் சமாதானமாகவில்லை.
இதையடுத்து, கோவிலுக்குள் செல்ல, நேற்று ஆலய நுழைவு போராட்டம் நடத்தப் போவதாக, ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் அறிவித்தனர். இதனால், அக்கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
கலெக்டர் முருகேஷ், வேலுார் டி.ஐ.ஜி., முத்துசாமி, எஸ்.பி., கார்த்திகேயன் உள்ளிட்டோர் அக்கிராமத்திற்கு சென்று, எதிர்ப்பு தெரிவித்த மக்களிடம் பேச்சு நடத்தினர்.
ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்களை, கலெக்டர் முருகேஷ், தன் தலைமையில் கோவிலிற்குள் அழைத்துச் சென்று, வழிபாடு செய்ய வைத்தார்.
இதனால், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.