புதுடில்லி : அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு கெடு விதித்து, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
கடந்தாண்டு ஜூலை 11ல் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் இடைக்கால பொதுச் செயலராக, முன்னாள் முதல்வர் பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மற்றொரு முன்னாள் முதல்வரான பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் இதில் அறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, பன்னீர்செல்வம் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முன், மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி, 'பொதுக்குழு செல்லாது' என, உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, பழனிசாமி தரப்பில் உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், 'பொதுக்குழு செல்லும்' என, தீர்ப்பளிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.
இதற்கிடையே, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு பிப்., 7 கடைசி நாள்.
இதையடுத்து, பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவில் கூறப்பட்டதாவது:ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என் கையொப்பத்துடன் கூடிய வேட்பாளர் பெயரை ஏற்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது. எனவே, என்னை அ.தி.மு.க.,வின் இடைக்கால பொதுச் செயலராக அங்கீகரித்து, நான் கையொப்பமிட்ட வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நேற்றைய தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையில், இந்த இடையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக அறிவித்த நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:
இந்த மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். இந்த மனுவின் நகல்களை தேர்தல் ஆணையத்துக்கும், பன்னீர்செல்வம் தரப்புக்கும் வழங்க வேண்டும். இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய, பிப்., 7 கடைசி நாள் என்பதால், பதில் அளிப்பதில் தேர்தல் ஆணையம் எந்த கால தாமதமும் செய்யக் கூடாது. இந்த மனு தொடர்பாக எதிர் தரப்பும் தன் பதிலை தெரிவிக்க வேண்டும்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான விவகாரத்தை மட்டுமே நாங்கள் விசாரிக்க உள்ளோம். இதைக் கடந்து, பொதுக் குழு தொடர்பான பிரதான விவகாரம் தொடர்பாக விசாரிக்க மாட்டோம். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை பிப்., 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அளிக்கும் பதிலை பொறுத்து, உச்ச நீதிமன்றம் தன் உத்தரவை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பதற்கான 'சஸ்பென்ஸ்' மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என தெரிகிறது.