Husband and wife strangled to death near Perambalur | பெரம்பலூர் அருகே கணவன், மனைவி கழுத்தறுத்து கொலை | Dinamalar

பெரம்பலூர் அருகே கணவன், மனைவி கழுத்தறுத்து கொலை

Updated : ஜன 31, 2023 | Added : ஜன 31, 2023 | |
பெரம்பலுார்; பெரம்பலுார் அருகே, கணவன், மனைவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வி.களத்துார் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர் பெரம்பலுார் மாவட்டம், மாவட்டம், தொண்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம்,75, இவரது மனைவி மாக்காயி, 70, இவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமான நிலையில் இவர்கள் தனியாக வசித்து வந்தனர்'
Husband and wife strangled to death near Perambalur  பெரம்பலூர் அருகே கணவன், மனைவி கழுத்தறுத்து கொலை

பெரம்பலுார்; பெரம்பலுார் அருகே, கணவன், மனைவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வி.களத்துார் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர் பெரம்பலுார் மாவட்டம், மாவட்டம், தொண்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம்,75, இவரது மனைவி மாக்காயி, 70, இவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமான நிலையில் இவர்கள் தனியாக வசித்து வந்தனர்' இந்நிலையில், நேற்று இரவு இருவரும் வீட்டில் தூங்கினர். இன்று அதிகாலை இருவரும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வி. களத்துார் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வி.களத்துார் போலீசார் இருவரின் சடலத்தை மீட்டு பெரம்பலுார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வி.களத்துார் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சொத்து பிரச்சனை , அல்லது நகை கொள்ளையடிப்பதற்காகவும் இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது .



மந்திரவாதி கைது


நாகர்கோவில் அருகே பள்ளிவிளையைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், தன் மனைவி அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுவது பற்றி, வடசேரி மேலகலுங்கடியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மந்திரவாதியை சந்தித்தார். தொழிலாளி வீட்டுக்கு சென்ற மணிகண்டன், சில பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறினார். அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்ற மணிகண்டன், தொழிலாளியின் மகளான, எட்டாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.


வயிற்று வலியால் அவதிப்பட்ட மகளை, பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அவர் நான்கு மாத கர்ப்பமாக இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர். விசாரணையில், வீட்டுக்கு வந்த மந்திரவாதி மணிகண்டன், தன்னை பலாத்காரம் செய்ததையும், வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியதையும் மாணவி கூறினார். நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார், மணிகண்டனை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



வட மாநிலத்தினர் 'வீடியோ': பீஹாரை சேர்ந்த இருவர் கைது


திருப்பூர், அனுப்பர்பாளையம், திலகர் நகரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில், நுாற்றுக்கும் மேற்பட்ட வட மாநிலத்தினர் தங்கி வேலை செய்கின்றனர். 'தமிழர்களை வட மாநிலத்தினர் அடித்து விரட்டுகின்றனர்' என்ற தகவலோடு, 26ம் தேதி, வீடியோ பரவியது. இது குறித்து, வேலம்பாளையம் போலீசார் விசாரித்தனர்.


நிறுவனத்துக்கு அருகிலுள்ள பேக்கரிக்கு, 14ம் தேதி டீ குடிக்க சென்றபோது, இருதரப்புக்கு தற்செயலாக ஏற்பட்ட பிரச்னை குறித்த வீடியோ, தவறான தகவலுடன் பரப்பப்பட்டது தெரிந்தது. இதற்கிடையே, மோதல் தொடர்பாக பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ரஜத்குமார், 24; பரேஷ்ராம், 27 ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எதிர் தரப்பைச் சேர்ந்த தமிழக வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வீடியோவை பரப்பியவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.



மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் சிறை


விருதுநகர், புல்லலகோட்டையைச் சேர்ந்தவர் உதயகுமார், 45; டைல்ஸ் பதிக்கும் தொழிலாளி. மனைவி பிரேம சுந்தரி, 31; மகளிர் குழு தலைவியாக இருந்தார். தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்ந்தனர். கடந்த, 2016 மே 31, இரவு, 12:00 மணிக்கு பிரேம சுந்தரி வீட்டுக்கு உதயகுமார் வந்தபோது ஏற்பட்ட தகராறில், பிரேம சுந்தரி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்.


இதில், அவர் உயிரிழந்தார். விருதுநகர் மேற்கு போலீசார் உதயகுமாரை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. உதயகுமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி பகவதி அம்மாள் நேற்று தீர்ப்பளித்தார்.



மாணவிக்கு பேக்கரி கடை தொழிலாளி 'லவ் டார்ச்சர்'


வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அருகே தீர்த்தம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ், 22; தனியார் பேக்கரி கடை தொழிலாளி. இவர், ஒடுக்கத்துாரைச் சேர்ந்த, 17 வயது பிளஸ் 2 மாணவி, பள்ளி சென்று வரும்போது, தினமும் காதல் தொல்லை கொடுத்து வந்தார். மாணவியின் பெற்றோர், நேற்று முன்தினம் பேக்கரிக்கு சென்று சந்தோஷை தாக்கினர். பின், வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தனர்.


ஆத்திரமடைந்த சந்தோஷ் மற்றும் அவரது உறவினர்கள், நேற்று மாணவியின் வீட்டுக்கு சென்று, அங்கிருந்தவர்களை தாக்கினர். இதில், மாணவி உள்ளிட்ட நான்கு பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த சந்தோஷ் மற்றும் வீடு புகுந்த தாக்கியவர்களை கைது செய்யக்கோரி, மாணவியின் உறவினர்கள், ஒடுக்கத்துார் பஸ் ஸ்டாண்டில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். அப்போது தீக்குளிக்க முயன்ற மூன்று பெண்களை போலீசார் தடுத்தனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை அடுத்து, அவர்கள் கலைந்தனர்.



சிறுமி பலாத்காரம்; வாலிபருக்கு 'ஆயுள்'


அரியலுார் மாவட்டம், குருவாலப்பர்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய குமார், 33. கடந்த, 2013ல், அதே பகுதியைச் சேர்ந்த, 14 வயது சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்படி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து, விஜயகுமாரை கைது செய்தனர்.


அரியலுார் மகளிர் நீதிமன்றத்தில், வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விஜயகுமாருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று உத்தரவிட்டார். விஜயகுமார், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.



விபச்சாரம்: அ.தி.மு.க., மகளிரணி நிர்வாகி, கணவர் கைது


விருதுநகர் கிருஷ்ணமாச்சாரி ரோடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி அமல்ராணி. இருவரும் விருதுநகர் பேராலி ரோடு ஐ.டி.பி.டி., காலனியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர். அங்கு விபச்சாரம் நடப்பதாக கிடைத்த தகவலில் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, போலீசார் ஆய்வு செய்தனர். அங்கிருந்த சிவகாசியை சேர்ந்த 24 வயது இளைஞர், சாத்துார் மேட்டமலையை சேர்ந்த 29 வயது பெண்ணிடம் விசாரித்தனர். இருவரும் விபசாரத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அப்பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய அமல்ராணி, அவரது கணவர் சந்திரசேகரனை கைது செய்தனர்.


latest tamil news


காஷ்மீர் வனப்பகுதியில் 4 பயங்கரவாதிகள் கைது


ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக ஹிந்து சிறுபான்மையினர் மற்றும் காஷ்மீரி பண்டிட்களை குறிவைத்து தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், காஷ்மீர் போலீசாரும், ராணுவமும் இணைந்து, புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோராவில் உள்ள வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை கண்டறிந்து, அதை சுற்றி வளைத்து அழித்தனர்.


அப்போது, லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த நான்கு பயங்கரவாதிகளை கைது செய்தனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ராகுலின் ஒற்றுமை யாத்திரை அவந்திபோராவை கடந்து சென்ற இரண்டாவது நாள், போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை நிகழ்ந்துள்ளது.



சிறுவன் பாலியல் பலாத்காரம்; 32 வயது பெண் மீது வழக்கு


மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் நகரில், ஒரு பெண், தன் 16 வயது மகனுடன் வசித்து வருகிறார். இந்த சிறுவன் நாசிக்கில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் 32 வயது பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர், கல்யாணுக்கு அடிக்கடி வந்து சிறுவனுடன் நன்கு பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டார்.


இதை பயன்படுத்தி நாசிக்கில் உள்ள தன் வீட்டிற்கு சிறுவனை அழைத்து சென்று, மது அருந்த செய்ததுடன், சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதையடுத்து, இச்சிறுவன் பள்ளிக்கு செல்வதாக கூறி, நாசிக்கில் உள்ள அப்பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்றுஉள்ளார். இந்த விவகாரம், சிறுவனின் தாய்க்கு தெரியவர, நேற்று போலீசில் புகார் அளித்தார். இதன்படி, பெண்ணின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X