திருப்பூர்:திருப்பூர், தாராபுரம் ரோடு, கோவில்வழி அருகிலுள்ள அமராவதிபாளையத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமை, மாட்டுச்சந்தை நடைபெறுகிறது.
தீபாவளிக்கு முன்பிருந்தே மாட்டுச்சந்தைக்கு வரத்து குறைவாக இருந்தது. புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக்கு பின் சற்று அதிகரித்தது. இந்த மாதத்தில், மழை குறைந்து பசும்புல் வளர்ச்சி இல்லாமல், தற்போது பனியும் குறைந்துள்ளதால், விவசாயிகள் பலர் மாடுகளை விற்பனை செய்ய, வேறு மாடுகளை வாங்க ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.பண்டிகை முடிந்தாலும், சந்தை களைகட்டுமென எதிர்பார்த்து பலரும் மாடுகளை விற்பனைக்கு நேற்று கொண்டு வந்திருந்தனர். இதனால், மாடு வரத்து நேற்று அதிகரித்தது. கடந்த ஆறு மாதங்களில் இல்லாத வகையில் நேற்று, 850 மாடுகள் வந்தன. சந்தைக்கு வெளியே பெருந்தொழுவு சாலையில் இரண்டு கி.மீ., துாரத்துக்கு வாகனங்களில் மாடுகள், வரிசைகட்டி நின்றிருந்தது.
கூட்டம் காரணமாக மூன்று மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து, வியாபாரிகள், விவசாயிகள் மாடுகளை வாங்க, விற்க சந்தைக்குள் வந்தனர். மாலை, 4:00 மணி வரை சந்தை நடந்தது. சிறிய ரக கன்றுக்குட்டி, 4,000 ரூபாய், நடுத்தரம், 10 முதல், 14 ஆயிரம், முதல் ரக மாடு, 25 ஆயிரம் முதல், 38 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது.