சிம்லா, மாச்சல பிரதேச கவர்னரின் பெயரில் போலி 'இன்ஸ்டாகிராம்' எனப்படும் சமூக வலைதள கணக்கு துவக்கப்பட்டு, ஒரு கும்பல் பணம் பறிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் உள்ளார்.
சமீபத்தில் இவரது பெயரில் சில மர்ம நபர்கள், இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு துவங்கியதுடன், அதில் தன் வங்கி கணக்குக்கு பணம் அனுப்புமாறும் பதிவிட்டுள்ளனர்.
இது தொடர்பான பதிவு, சமூக வலைதளங்களில் பரவி வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கவர்னர் மாளிகை அதிகாரிகள், உடனே, சைபர் கிரைம் பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்டாகிராமில் துவங்கப்பட்ட போலி கணக்கு முடக்கப்பட்டது.
இதுகுறித்து, கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் கூறுகையில், ''போலி கணக்கு துவங்கி குற்றச்செயலில் ஈடுபடும் மர்ம நபர்கள், அடுத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். எனவே, பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்,'' என்றார்.