புதுடில்லி, 'புதுடில்லியில், 2021ல் நடந்த நிகழ்ச்சியில் வெறுப்புணர்வை துாண்டும் வகையில் பேசியது தொடர்பான வழக்கில், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்' என, உச்ச நீதிமன்றத்தில் புதுடில்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
'ஹிந்து யுவ வாகினி' என்ற அமைப்பு சார்பில், 2021 டிசம்பரில் புதுடில்லியில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற வர்கள், மத உணர்வை துாண்டும் வகையிலும், வெறுப்புணர்வை துாண்டும் வகையிலும் பேசியதாக புகார் எழுந்தது.
இது தொடர்பான விஷயத்தில், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், புதுடில்லி போலீசார் தாமதப்படுத்துவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், பல்வேறு கேள்விகளையும் புதுடில்லி போலீசாரிடம் கேட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, புதுடில்லி போலீசார் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ், ''வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கில் விசாரணையின் பெரும்பகுதி முடிந்து விட்டது. விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்,'' என்றார்.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.