காஷ்மீரில் அமையும் ஸ்ரீசாரதாம்பாள் கோவிலில் பிரதிஷ்டை செய்ய இருக்கும் பஞ்சலோக விக்ரஹம், சிருங்கேரி பீடத்தில் இருந்து பக்தர்கள் புடைசூழ புறப்பட்டது.
இந்தியாவின் புராதனமான ஆன்மீக ஸ்தலமாக விளங்கி வந்த காஷ்மீர் சாரதா பீடம், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது, பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுவிட்டது. இதனால், இந்தியர்கள் யாரும் அங்கு சென்று வழிபாடு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
ஒருகாலத்தில், பிரசித்தி பெற்று விளங்கிய சாரதாதேவி கோவிலுடன் கூடிய, சர்வ கலாசாலையாக திகழ்ந்தது. பல மகான்களும் தங்கி வழிபட்ட மையம், பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு, முற்றிலும் தகர்க்கபட்டது; தற்போது, ஒரு சுவர் மட்டுமே அங்கு மிஞ்சியிருக்கிறது.
நீலம் நதிக்கரையில், ஸ்ரீநகரில் இருந்து, 130 கி.மீ., துாரத்திலும், இந்தியா - பாகிஸ்தான் எல்லை அருகே, 'சாரதா' என்ற கிராமத்தில், 1981 மீட்டர் உயரத்தில், காஷ்மீர் மக்களால், சிவனின் வசிப்பிடமாக கருதப்படும் 'ஹர்முக்' பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
![]()
|
3வது புனித பூமி
காஷ்மீர் ஹிந்துக்கள், கீர்பவானி கோவில், வைஷ்ணவி தேவி ஆகிய இரண்டு சக்திபீடங்கள் தவிர, இதனை முதல் சக்திபீடமாக கொண்டாடினர். மார்த்தாண்ட சூரியனார் கோவில், அமர்நாத் குகை ஆகியவற்றுடன் சேர்த்து, இதனை மூன்றாவது புனித பூமியாக போற்றுகின்றனர்.
இப்பீடத்தில் வீற்றிருக்கும் தேவியை, கல்வியின் அதிபதியான சாரதா, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதி, சொற்களின் சொரூபமாகிய வாக்தேவி எனும் முப்பெரும் தேவியர்களாக வழிபட்டு வந்தனர்.
ஹிந்து மக்கள், சாரதாதேவி பீடத்தில் வழிபாடு நடத்த முடியாத நிலையை மாற்றிட, புதிய கோவில் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. பழைய சாரதாபீடத்துக்கு, 10 கி.மீ., அருகில், இந்திய எல்லையில் உள்ள, 'டீட்வால்' கிராமத்தில், 1943 வரை செயல்பட்ட தர்மசாலாவில் கோவில் அமைகிறது.
3500 சதுர அடி பரப்பில், சாரதா கோவில் கட்ட 2021 டிச., 2 ல் 'சேவ் சாரதா கமிட்டியினரால்' அடிக்கல் நாட்டி, கோவில் திருப்பணி நடக்கிறது. ஆதிசங்கரர் நிறுவிய நான்கு ஆம்னாய பீடங்களை குறிக்கும் வகையில், நான்கு நுழைவாயில்களுடன், நடுவில், ஸ்ரீசாரதாம்பாளின் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்படஉள்ளது.
'சாரி முபாரக்'
ஆண்டுதோறும், 'டீட்வால்லில்' துவங்கி, 'சில்ஹான' கிராமம் வழியாக, சாரதா பீடம் வரை, 'சாரி முபாரக்' எனும் புனித யாத்திரை நடந்து வந்தது. கடைசி யாத்திரையானது, சுவாமி நந்தலால் கவுல் தலைமையில், 1948 ம் ஆண்டில் நடந்தது; பிறகு தடை செய்யப்பட்டது.
ஹிந்துக்களால் புண்ணிய தலமாக போற்றி வணங்கப்பட்ட, ஸ்ரீசாரதா தேவி பீடம் போலவே, புதிய கோவில் அமைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, ரவீந்திர பண்டிட் தலைமையிலான, காஷ்மீர் சாரதா யாத்திரை ஆலய கமிட்டி உறுப்பினர்கள், சிருங்கேரியில், ஸ்ரீசாரதாம்பாளையும், ஜகத்குரு ஸ்ரீபாரதி தீர்த்த மகா சுவாமிகளையும், ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகளையும் தரிசனம் செய்தனர்.
புதிதாக அமைக்கப்படும் ஸ்ரீசாரதா ஆலய நிர்மாணத்திற்கு வழிகாட்டி, அருளாசி வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கு இணங்க, புதிய ஆலயத்தை சிருங்கேரி சமஸ்தானம் சார்பில் கட்டிக்கொடுப்பதாகவும், கோவிலில் ஸ்தாபனம் செய்ய, பஞ்சலோகத்தில் புதிய சாரதாம்பாள் விக்ரஹத்தை அளிப்பதாகவும் ஆசி வழங்கியிருந்தனர்.
பாரதீ தீர்த்த சுவாமி
அவ்வகையில், காஷ்மீர் ஸர்வஞ்ஞ பீடத்தில் கட்டப்பட்டு வரும் கோவிலுக்கான, சாரதாம்பாள் பஞ்சலோக விக்ரஹம், ஜன., 24ம் தேதி சிருங்கேரியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரவீந்திர பண்டிட் உட்பட, அனைத்து உறுப்பினர்களும், சிருங்கேரியில், விக்ரஹத்தை பெற்றுக்கொண்டனர்.
ஸ்ரீசாரதாம்பாள் விக்ரஹம், இந்தியா முழுவதும் அலங்கரித்த வாகனத்தில் யாத்திரையாக எடுத்துச்சென்று, மார்ச் 20ம் தேதி காஷ்மீர் கொண்டு சேர்க்கப்படும். பிறகு, கோவில் கும்பாபிேஷக தேதி அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
ஜன., 24 என்பது, சிருங்கேரி பீடத்தின் இறைய பீடாதிபதி ஸ்ரீவிதுசேகர பாரதீ சன்னிதானம், 2015ம் ஆண்டு சன்யாஸம் பெற்ற நாள் மட்டுமல்ல, காஷ்மீர் ஹிந்துக்களால், 'குரு திரீதீயை' எனும் நன்னாளாக கொண்டாடப்படும் நாளாகவும் அமைந்துள்ளதாக யாத்திரை கமிட்டி மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
புண்ணிய பூமியாகிய காஷ்மீர் நீலம் நதிக்கரையில் அமையும், அன்னை ஸ்ரீசாரதாம்பாள் கோவிலுக்கு சென்று ஹிந்துக்கள் வழிபாடு நடத்தும் பாக்கியம் விரைவில் கிடைக்கப்போகிறது. அதற்கு அச்சாரமாக, சிருங்கேரியில் இருந்து பஞ்சலோக விக்ரஹ யாத்திரையும் துவங்கியிருக்கிறது. - நமது சிறப்பு நிருபர் -