பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் இன்று துவங்குகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 - 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார். பி.பி.சி. ஆவணப்பட விவகாரம் தொழில் அதிபர் அதானி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எழுப்பி இந்த கூட்டத் தொடரில் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள்
தயாராகி வருகின்றன.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்குகிறது. இந்தாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் லோக்சபா ராஜ்யசபா என இரண்டு சபைகளின் கூட்டு கூட்டம் பார்லிமென்ட் மைய மண்டபத்தில் நடக்கவுள்ளது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தவுள்ளார்.
ஜனாதிபதி உரை நிகழ்த்தி முடித்ததும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார்.
![]()
|
இதைத் தொடர்ந்து நாளை காலை 11:00 மணிக்கு லோக்சபாவில் மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதைத் தொடர்ந்து ராஜ்யசபாவிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இது நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட். அடுத்தாண்டு துவக்கத்தில் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதால் இது தற்போதைய தே.ஜ. கூட்டணி அரசின் கடைசி முழுமையான பட்ஜெட்டாகவும் இருக்கும்.கடந்த சில ஆண்டுகளைப் போல இந்த பட்ஜெட்டும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்படும். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக செயலி வாயிலாக பட்ஜெட் விபரங்களை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் இரண்டு நாட்களுக்கு பூஜ்ய நேரம் கேள்வி நேரம் எதுவும் இருக்காது. பிப். 2ம் தேதியிலிருந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்படும். இதன் முடிவில் இரண்டு சபைகளிலும் பிரதமர் மோடி பதில் அளிப்பார்.
இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டு பகுதிகளாக நடக்கவுள்ளது. முதல் அமர்வு பிப். 13 வரை நடக்கும். அடுத்த அமர்வு மார்ச் 13ல் துவங்கி ஏப். 6 வரை நடக்கவுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு முந்தைய முழுமையான பட்ஜெட் என்பதால் இதில் புதிய வரி விதிப்புகள் எதுவும் இருக்காது என தெரிகிறது.
மேலும் நடுத்தர குடும்பத்தினரை திருப்தி படுத்தும் வகையில் மாத சம்பளதாரர்களுக்கு வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
புதிய பார்லிமென்ட் கட்டுமானப் பணி முழுமையாக முடிவடையாததால் பழைய கட்டடத்திலேயே இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கும் என ஏற்கனவே லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்துள்ளார்.
தொழில் அதிபர் அதானியின் நிறுவனங்கள் தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் அளித்த அறிக்கை சீன எல்லையில் நிலவும் பதற்றம் பி.பி.சி. ஆவணப்பட விவகாரம் ஆகியவற்றை மையமாக வைத்து இந்த கூட்டத் தொடரில் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அனைத்துக்கட்சி கூட்டம்
பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு மத்திய அரசு சார்பில் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில், அனைத்து கட்சிகளின் பார்லி., குழு தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டம் முடிந்ததும், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாவது:
கூட்டத் தொடரை எந்தவித அமளியும் இன்றி சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு அளிக்கும்படி அனைத்து கட்சி தலைவர்களுக்கு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. சட்டவிதிகளின் கீழ், எந்த விஷயத்தை வேண்டுமானாலும் விவாதிக்க தயாராக இருப்பதாகவும் அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் பங்கேற்ற ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், தி.மு.க., மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள், தொழில் அதிபர் அதானி விவகாரம் தொடர்பாக இந்த கூட்டத் தொடரில் விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஜாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்துவது குறித்து விவாதிக்க அனுமதிக்கும்படியும், பெண்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான மசோதாவை நிறைவேற்றும்படியும், ஆந்திர மாநில ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
- நமது சிறப்பு நிருபர் -