சென்னை: மறைந்த கருணாநிதிக்கு, சென்னை மெரினாவில் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நினைவிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. கருணாநிதியின் எழுத்தாற்றல் குறித்து விளக்கும் வகையில், வங்க கடலில் 100 அடியில் பேனா சின்னம் வைப்பதற்கு, அரசு முடிவெடுத்து உள்ளது.
இதற்காக, மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த, மத்திய சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 10:30 மணி முதல் பகல் 1:00 மணி வரை கருத்து கேட்கப்பட உள்ளது.
கருத்து தெரிவிக்க விரும்புபவர்கள், தங்கள் பெயர்களை, காலை 9:00 மணி முதல் முன்பதிவு செய்ய வேண்டும். சென்னை கலெக்டர் அமிர்தவல்லி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்திற்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.