ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், வேட்புமனு தாக்கல் இன்று(ஜன.,31) துவங்குகிறது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ., திருமகன் மறைவு காரணமாக, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு, பிப்., 27ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் நடக்கும் முதல் இடைத்தேர்தல். அ.தி.மு.க.,வில் பழனிசாமி - பன்னீர்செல்வம் இடையே பிளவு ஏற்பட்ட பின் நடக்கும் தேர்தல். லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் தேர்தல் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திஉள்ளது.
இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், இன்று துவங்குகிறது; பிப்., 7 கடைசி நாள். பிப்., 8ல் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுவை வாபஸ் பெற, பிப்., 10 கடைசி நாள். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். பிப்., 27ல் ஓட்டுப்பதிவும், மார்ச் 2ல் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.
இன்று மனு தாக்கல் துவங்க உள்ள நிலையில், தி.மு.க., கூட்டணி சார்பில், காங்கிரஸ் சார்பில் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
தே.மு.தி.க., சார்பில் ஆனந்த், அ.ம.மு.க., சார்பில் சிவபிரசாந்த் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில், பெண் வேட்பாளராக மேனகா நிறுத்தப்பட்டுள்ளார்.
பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வில் குழப்பம் நீடிக்கிறது. அ.தி.மு.க., சார்பில் வேட்பாளர் நிறுத்த உள்ளதாக, பழனிசாமி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, 'அ.தி.மு.க., சார்பில் நாங்களும் போட்டியிடுவோம். பா.ஜ., போட்டியிட்டால், அக்கட்சிக்கு ஆதரவு அளிப்போம்' என, பன்னீர்செல்வமும் அறிவித்தார்.
பா.ஜ., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு, இருவரில் யாரை ஆதரிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், இடைக்கால பொதுச் செயலராக தன்னை அங்கீகரித்து, தன் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி, தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் கமிஷன் என்ன பதில் அளிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில், இரு தரப்பினரும் உள்ளனர்.
-- நமது நிருபர் -
Advertisement