வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தேர்தல் செலவு தொடர்பாக, அமைச்சர்கள் நேரு, வேலு பேச்சு தொடர்பாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செலவு தொடர்பாக, அமைச்சர்கள் நேரு, வேலு ஆகியோர் பேசும் வீடியோவை, அண்ணாமலை தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆலோசனை
ஈரோடு கிழக்கு தொகுதியில், தி.மு.க., கூட்டணியில், காங்., சார்பில் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர்களுக்கு, பெருந்துறை சாலையில் காரியாலயம் உள்ளது. அங்கு நேற்று, தி.மு.க., அமைச்சர்கள் நேரு, வேலு, முத்துசாமி முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் வேட்பாளர் இளங்கோவனும், அமைச்சர் நேருவும் பேசியதாக வீடியோ பதிவு வெளியானது. முழு பேச்சாக இல்லாமல், சில வார்த்தைகள் பதிவாகாமலும், சில வார்த்தைகள் கோர்வை இன்றியும் காணப்பட்டது.
வீடியோவில் அமைச்சர்கள் முத்துசாமி, வேலு மைக்கில் பேசியபோது, அமைச்சர் நேரு - இளங்கோவன் பேசியதை, டைட்டில் போட்டு வெளியான வீடியோவில் உள்ளதாவது:
அவன் என்னத்துக்கு... அவன் தண்டம். மந்திரியெல்லாம் கூடாது. தேவை இல்லை. நான் நேத்தே சொல்லிட்டேன். எல்லாரும் வந்துடுங்கன்னு. மாவட்ட நிர்வாகிகள் எல்லாம் நான் கண்டுக்க மாட்டேன்.
அப்புற சொல்லனும்னு நெனச்சேன். காசு பணமெல்லாம் குடுக்கணும். எல்லா மாவட்ட தலைவரையும் கூப்பிட்டு, மதியம் பணம் குடுத்து செட்டில் பண்ணிட்டு, வர்ற, 30, 31ம் தேதி, 1ம் தேதிக்குள்ள எல்லாத்தையும் பண்ணி முடிச்சுடனும்.
வாட்ச், பிரியாணி
பின், 31 பூத்திலும், 10 ஆயிரம் பேர் ரெடி பண்ணனும். நாளை தலைவர் ஸ்டாலின், அதிகாரிகளுக்கு வாட்ச், பிரியாணி தர போறாரு.
இதற்கிடையே, இப்போ நான் புறப்பட்டு திருச்சி போய், அங்கிருந்து சென்னை போய், அங்க கூட்டத்தை முடிச்சுட்டு கோயம்புத்துார் போய், 31 ராத்திரி இங்க வந்துருவேன். எல்லாத்தையும் முடிச்சிட்டேன். பழனி அண்ணன் வரதையும், மகேஷ் வந்தா பாப்போம். இல்லை, நாமளே பண்ணிடுவோம்.
நாசர், 5க்கு மேல வேண்டாம், வேண்டாம் என்கிறான். லோக்கல் ஆளுங்க, விடுதலை சிறுத்தைங்க எங்கெல்லாம் கொடுக்கவில்லயோ, அங்க நம்ம கொடுத்துடலாம். செந்தில்பாலாஜி கொடுத்துவிட்டார். இவ்வாறு வீடியோ பேச்சு நிறைவடைகிறது.
பணத்தை நம்பும் கட்சி
இதுகுறித்து, அண்ணா மலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தி.மு.க., என்பது பணத்தை மட்டுமே நம்பி, தேர்தலை சந்திக்கும் ஒரு கட்சி. பணத்தை வைத்து எதையும் வாங்கி விடலாம் என்று நம்பும் ஒரு கட்சி. சந்தேகம் இருப்பின் இந்த வீடியோவை பார்க்கவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வீடியோ பதிவு குறித்து செய்தியாளர்களிடம், வேட்பாளர் இளங்கோவன் கூறியதாவது: பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு பதில் சொல்ல தயாராக இல்லை. இதுபற்றி எனக்கு தெரியாது. அதுபோல, பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு கட்சி கூட்டணிகளில் பல்வேறு கருத்துகளை நான் தெரிவித்துள்ளேன். அதை வெட்டியும், ஒட்டியும் தற்போது வெளியிட்டு வருகின்றனர். இதை நான் பொருட்படுத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

ஈரோட்டில், நசியனுார் சாலையில் காங்., கட்சி தேர்தல் பணிமனை திறப்பு விழா நடந்தது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:
அமைச்சர் நேருவும், வேட்பாளர் இளங்கோவனும் பேசுவது போல சமீபத்தில் வீடியோ வெளி வந்துள்ளது. அதில், 'நாளை மறுதினம் செயல் வீரர்கள் கூட்டம் வைத்துள்ளோம். அதற்கு தலைவர்கள் வருவதால், முறையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா' என கேட்டனர்.
அதை சில விஷமிகள் ஒட்டி, வெட்டி, பணம் பற்றி பேசியதாக பரப்புகின்றனர். திட்டமிட்டு மார்பிங் செய்து பரப்பினர். இது எந்த வகையிலும் தி.மு.க., வெற்றியை பாதிக்காது.இவ்வாறு வேலு கூறினார்.
- நமது நிருபர் -