வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பூர்: 'போலீசாரைக் களங்கப்படுத்தி பொது தளங்களில் நடந்து கொள்வோர் மீது முதல்வர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஹிந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சமீபத்தில், ஆரணியில் அரசு, தனியார் நிலங்களை ஆக்கிரமித்த வி.சி., கட்சியினரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் ஸ்டேஷன் சென்ற வி.சி.க., மாவட்ட தலைவர், ஜாதிப் பெயரை சொல்லி, இன்ஸ்பெக்டரை தரக்குறைவாக பேசியதற்காக கைது செய்யப்பட்டார்.
ஜாமினில் வெளியே வந்த அக்கட்சியினர், போலீசாரை கேவலப்படுத்தி கோஷம் போட்டு ஊர்வலமாக சென்றதுடன், போலீசாருக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். போலீசாரில், யாராவது தவறு செய்தால், அவர்களை சுட்டிக்காட்டி கண்டிக்கலாம். ஒட்டுமொத்த போலீசாரையும் குறை கூறுவது முட்டாள்தனம்.
![]()
|
போலீஸ் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக முதல்வர், போலீசாரின் கண்ணியத்தை காக்க முன்வர வேண்டும். போலீசாரை களங்கப்படுத்தி பொது தளங்களில் நடந்து கொள்பவர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகங்கையில் சட்ட விரோதமாக, ஈ.வெ.ரா., சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்த தாசில்தார், டி.எஸ்.பி., காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால், ஆளுங்கட்சி கூட்டணியில் இருப்பவர்களின் சட்ட விரோத செயலுக்கு, துணை போக, அரசு துறையை நிர்ப்பந்திப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. ஒவ்வொரு மாதமும் உயர் அதிகாரிகள், 'துறை மாற்றம்' என்ற பெயரில் அரசால் பந்தாடப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.