வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர்: கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலின் பாரத ஒற்றுமை யாத்திரை முடிவுக்கு வந்துள்ளது. தனிப்பட்ட முறையில் ராகுல் மீதான கண்ணோட்டம் மாறியது, கட்சித் தொண்டர்கள் இடையே உற்சாகம் ஏற்பட்டுள்ளது என நேர்மறையான பலன்கள் கிடைத்தாலும், கட்சியில் குழப்பம், சர்ச்சைகள், கோஷ்டி மோதல் நீடிப்பதால், இந்த நடைபயணம், 2024 லோக்சபா தேர்தலுக்கு உதவுமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான பாரத ஒற்றுமை யாத்திரையில் ஈடுபட்டார். கன்னியாகுமரியில் கடந்தாண்டு செப்., 7ம் தேதி துவங்கிய இந்த பாதயாத்திரை, காஷ்மீரில் நேற்று நிறைவு பெற்றது. கடந்த 140 நாட்களில், 12 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களில், 4,000 கி.மீ., துாரத்துக்கு இந்த நடைபயணம் நடந்தது.
இந்த பயணத்தின்போது, 12 பொதுக் கூட்டங்கள், 100 தெருமுனை சந்திப்புகள், 13 பத்திரிகையாளர் சந்திப்புகளில் ராகுல் பங்கேற்றார். மேலும், 275 நடை உரையாடல், 100 இடங்களில் அமர்வு கலந்துரையாடல்களிலும் அவர் ஈடுபட்டார்.
புதிய நம்பிக்கை
இந்த பயணத்துக்கு இடையே, கட்சியின் தலைவர் தேர்தல் நடந்து, மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைவரானார். ராகுலின் பயணத்தின்போது, கார்கே உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். முன்னாள் தலைவரும், ராகுலின் தாயுமான சோனியா, இரண்டு இடங்களில் நடை பயணத்தில் பங்கேற்றார். பொதுச் செயலரும், சகோதரியுமான பிரியங்கா பல்வேறு மாநிலங்களில் ராகுலுடன் நடை பயணத்தில் பங்கேற்றார்.
தேசிய மாநாட்டு கட்சி, சிவசேனா உட்பட சில தோழமை கட்சிகளின் தலைவர்களும், ராகுலுடன் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். இந்த நடைபயணம் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்தப் பயணத்தால் ராகுலுக்கும், கட்சிக்கும் என்ன பலன் கிடைத்துள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளதாவது: இந்தப் பயணத்தால் கிடைத்துள்ள பலன், ராகுல் மீதான கண்ணோட்டம் சற்று மாறியுள்ளது தான். பகுதி நேர அரசியல்வாதியாக, பொறுப்புகளை ஏற்க மறுக்கும் தலைவராக இருந்த அவர், தற்போது சற்று தீவிர அரசியல்வாதியாக மாறியுள்ளார். நாடு முழுதும் நடந்த இந்த பயணத்தால், கட்சித் தொண்டர்களிடையே புதிய நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.
அதே நேரத்தில் இந்த பயணம் கட்சியில் உள்ள குழப்பங்கள், கோஷ்டி மோதல்களை வெளிப்படுத்தியதுடன், புதிய சர்ச்சைகளையும் ஏற்படுத்திஉள்ளது. மஹாராஷ்டிராவில் நடந்த பயணத்தின்போது, ஹிந்துத்துவா தலைவர் வீர் சாவர்க்கர் குறித்து ராகுல் கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. கூட்டணி கட்சியான சிவசேனாவும் எதிர்ப்பு தெரிவித்தது. அதுபோல், ராஜஸ்தானுக்கு நுழைவதற்கு முன், அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட், மூத்த தலைவர் சச்சின் பைலட் இடையே மீண்டும் பனிப்போர் ஏற்பட்டது.
ஆதிக்கம் தொடர்கிறது
வட மாநிலங்களில், ராகுல் 'டி - சர்ட்' மட்டும் அணிந்து நடைபயணத்தில் ஈடுபட்டது விவாதப் பொருளானது. சில இடங்களில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சிலர் உயிரிழந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஜம்முவுக்குள் நுழைவதற்கு முன், ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல் குறித்து மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், இதற்கு ராகுல் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஒட்டு மொத்தத்தில் இந்த நடைபயணம் ராகுலுக்கு தனிப்பட்ட முறையில் பெரிய வெற்றியாகும். அதே நேரத்தில் இந்தப் பயணம் லோக்சபா தேர்தலில் கட்சிக்கு அதிக ஓட்டுகள் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே.
கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இருந்தாலும், சோனியா குடும்பத்தின் ஆதிக்கம் தொடர்கிறது என்பதையும் இந்தப் பயணம் உணர்த்தியுள்ளது. பல மாநில கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும், அவர்கள் பாதயாத்திரையில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதனால், 2024 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமையுமா என்பது கேள்விக்குறியே. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடும் பனிப்பொழிவுக்கு இடையே, ராகுலின் பாரத ஒற்றுமை யாத்திரை, ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்று நிறைவடைந்தது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சகோதரி பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தி.மு.க., ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, பகுஜன் சமாஜ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சியின் மூத்த தலைவர்கள் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.அதே நேரத்தில் திரிணமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், பாரத ராஷ்ட்ரீய சமிதி, ஆம் ஆத்மி உட்பட பல முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
அரசியல் நோக்கர்கள் மேலும் கூறியுள்ளதாவது:நாட்டை ஒற்றுமைப்படுத்தும் நோக்கத்துடன் பாரத ஒற்றுமை யாத்திரை மேற்கொள்ளப்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. ஆனால் இந்த நோக்கம், ஐந்து மாத நடைபயணத்தால் சாத்தியமில்லை. ராகுல் மீதான பிம்பத்தை உடைக்க வேண்டும், தொடர் தோல்விகளால் துவண்டுள்ள தொண்டர்களை உற்சாகப்பபடுத்த வேண்டும் என்பதே இந்த நடைபயணத்தின் அடிப்படை நோக்கமாக இருந்தது. இதற்கான பதில், இந்தாண்டு நடக்க உள்ள, ஒன்பது மாநில சட்டசபை தேர்தல்களில் வெளிப்படும்.ராகுலின் இந்த யாத்திரையை பல முக்கிய மாநிலக் கட்சிகள் புறக்கணித்துள்ளன அல்லது தவிர்த்துள்ளன. இதனால், தேசிய அளவில் மெகா கூட்டணியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பும் காங்கிரசுக்கு இல்லை. ராகுல் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டாலும், அக்கட்சியின் தலைமையை ஏற்க பல மாநிலக் கட்சிகள் தயாராக இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.