வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
சென்னை: ''கவுன்சிலர்களுக்கு மாத சம்பளம் வழங்குவது குறித்து, விரைவில் நல்ல செய்தி வரும். அடுத்த கூட்டத்தொடர் முதல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும்,'' என, மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் மேயர் பிரியா தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கவுன்சில் கூட்டம், மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. இதில், 80 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், நேரமில்லா நேரத்தின் போது அ.தி.மு.க., கவுன்சிலர் சேட்டு பேசியதாவது:
எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படுகிறது. அதேநேரம், மக்களின் நேரடி குறைகளை சரி செய்யும் பணியில் ஈடுபடும் கவுன்சிலர்களுக்கு வழங்கப்படுவதில்லை. எனவே, எங்களுக்கும் மாத சம்பளம் வழங்க வேண்டும். தற்போது எங்களுக்கு கூலியாக 800 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கோரிக்கையை அனைத்து கவுன்சிலர்களும் வரவேற்றனர்.
இதற்கு மேயர் பிரியா அளித்த பதிலில், ''கவுன்சிலர்களுக்கு மாத சம்பளம் குறித்து, அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் நல்ல செய்தி வரும்,'' என்றார்.
ம.தி.மு.க., கவுன்சிலர் ஜீவன் பேசியதாவது:
தமிழ்நாடு என்ற பெயரை கவர்னர் சட்டசபையில் பேச மறுத்தது கண்டனத்திற்குரியது. மேலும், தலைவர்கள் பெயரையும் அவர் குறிப்பிட மறுத்து இருக்கிறார்.
எனவே, சென்னை மாநகராட்சி சார்பில் கவர்னருக்கு எதிரான கண்டன தீர்மானத்தை, மேயர் கொண்டுவர வேண்டும். அதேபோல், ஒவ்வொரு முறையும் கூட்டம் துவங்குவதற்கு முன், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கவர்னருக்கு எதிராக கண்டன தீர்மானத்தை கொண்டு வர, காங்., - வி.சி., ஆகிய கட்சிகளும் வலியுறுத்தின.
இது குறித்து கமிஷனர், துணை மேயரிடம் ஆலோசித்த பின் மேயர் பிரியா, கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார். அதேநேரம், அடுத்த கூட்டத்தொடர் முதல், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும் என தெரிவித்தார்.

'பெஞ்ச்' தேய்க்கும் அதிகாரிகள்
கணக்கு குழு தலைவர் தனசேகரன் கூறியதாவது:
மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 348 இ - கழிப்பறை கட்டுவதற்கு, நான்கு நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் நடந்தன. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த நிர்வாக சீர்கேட்டால், இ - கழிப்பறைகள் முறையான பராமரிப்பு இல்லாத நிலையில் சீர்குலைந்து உள்ளன.
எனவே, 348 கழிப்பறைகள் குறித்தான முழு அறிக்கை, அடுத்த கவுன்சில் கூட்டத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதில் தொடர்புடைய அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பெருங்குடி மண்டலம், எம்.ஜி.ஆர்., சாலையில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கந்தனின் நிலத்திற்கு, 29.33 லட்சம் ரூபாய் திறந்தவெளி ஒதுக்கீடு கட்டணம் வசூலிக்காமல், கட்டட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேருந்து நிழற்குடையில் விளம்பரம் செய்ய ஒப்பம் பெற்ற நான்கு நிறுவனங்கள், 20.19 கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்துள்ளன. அவற்றை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து மூன்றாண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பதிலளித்து பேசியதாவது:
சென்னையில், 2014ல் இ - கழிப்பறை 144 இடங்களில் அமைக்கப்பட்டது. சேதமடைந்துள்ள இ - கழிப்பறைகள், குறிப்பிட்ட நிறுவனங்களை அழைத்து சீரமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 37 இடங்களில் இ - கழிப்பறை சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கழிப்பறைகள் விரைவில் சீரமைக்கப்படும்.
மேலும், சென்னை மாநகராட்சி முழுதும், கழிப்பறைகள் கட்ட தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, புதிதாக நவீன கழிப்பறைகள் மற்றும் சிறுநீர் கழிப்பறைகள் 358 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தேவையான இடங்களில் 24 மணி நேரமும் கழிப்பறைகள் செயல்பட உள்ளன.
இவை, ஒப்பந்த அடிப்படையில் தனியார் பராமரிப்பில் விடவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. திறந்தவெளி ஒதுக்கீடு கட்டணம் குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். மார்ச் மாதத்திற்குப் பின், மாநகராட்சி அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
வரலாறு முக்கியம் மேயரே!
வி.சி., கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் அம்பேத் வளவன், ''அரசு கட்டடங்களில், தாளமுத்து நடராஜன் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திற்காக முதலில் இறந்தவர் நடராஜன், அதன் பின் தான் தாளமுத்து இறந்தார். எனவே, தாளமுத்து நடராஜனுக்கு பதிலாக, நடராஜன் தாளமுத்து என பெயர் இடம் பெற வேண்டும்,'' என்றார்.
இதற்கு மேயர் பிரியா பதிலளிக்கையில், ''நடராஜன் தாளமுத்து தான் அவரது பெயர் என்றால், அவற்றை மாற்றி குறிப்பிடலாம்,'' என்றார். அப்போது தி.மு.க., கவுன்சிலர்கள், 'அவை ஒருவரின் பெயரல்ல. அவர்கள் இரண்டு பேர். வரலாறு தெரியாமல் பேசாதீர்கள்' என கூச்சலிட்டனர். உடனே, துணை மேயர் மகேஷ்குமார் குறுக்கிட்டு, ''அரசு கட்டடங்களில் பெயர் மாற்றுவது தமிழக அரசின் பணி,'' என்றார்.
இனி 'ரைட்' போலாம்!
எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் வாகனங்களுக்கு 'பாஸ்' வழங்குவது போல், கவுன்சிலர்களின் வாகனங்களுக்கும் வழங்க வேண்டும் என, கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர்.இதை ஏற்று, சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு நேற்று, 'க்யூ ஆர் கோடு'டன் கூடிய வாகன 'பாஸ்' வழங்கப்பட்டது. 'க்யூ ஆர் கோடை ஸ்கேன்' செய்தால், கவுன்சிலர் பெயர், வார்டு எண், மண்டலம், முகவரி, தொடர்பு எண், செல்லுபடியாகும் காலம் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.
1,336 ஒலிபெருக்கி கொள்முதல்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:
கொசு ஒழிப்பு பணிக்கான தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்ட பணியாளர்கள், மேலும் ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளனர்
இணைய வழி கட்டட வரைபடம் கூர்ந்து ஆய்வு செய்யும் மென்பொருளை வாங்குவதற்கு நிர்வாக அனுமதி
பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்கில், குப்பையை சமன் செய்ய, ஒப்பந்த அடிப்படையில் 'பொக்லைன்' இயந்திரங்கள் பயன்படுத்த நிர்வாக அனுமதி சென்னை மாநகராட்சியின் அறிவிப்புகளை அறிவிக்க 'பேட்டரி' வாயிலாக இயங்கும் வாகனங்களில் ஒலிபெருக்கிகள் 1,336 எண்ணிக்கையில் கொள்முதல்
தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்துார், அண்ணாநகர் ஆகிய மண்டலங்களில், குப்பை சேகரிக்க பயன்படுத்தப்படும் மிதிவண்டிகளுக்கு மாற்றாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பேட்டரி வாயிலாக இயங்கும் வாகனங்கள் கொள்முதல்
சென்னை மாநகராட்சியில் ஏரியா சபை அமைக்கப்பட்டு, வார்டுக்கு 10 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும், அந்தந்த வார்டுக்கு உதவி பொறியாளர்கள் செயலராக நியமித்து அனுமதி உள்ளிட்ட 80 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
தந்தது என்னாச்சு?
மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள், 'எங்களுக்கான மேம்பாட்டு நிதி 35 லட்சம் ரூபாய் போதவில்லை. எனவே, 1 கோடி ரூபாய் மேம்பாட்டு நிதி வழங்க வேண்டும்' என, கோரிக்கை வைத்தனர்.அப்போது துணை மேயர் மகேஷ்குமார் பேசுகையில்,''பல கவுன்சிலர்கள், தங்களுக்கான மேம்பாட்டு நிதியை செலவிடாமல் உள்ளனர். இந்த நிதியாண்டு முடிய, இரண்டு மாதங்களே உள்ள நிலையில், தங்களுக்கான மேம்பாட்டு நிதியை பயன்படுத்தி, வார்டு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்,'' என்றார்.
கவுன்சிலர் மயக்கம்
சென்னை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில், 14வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பானுமதி, திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அவர் மயக்கமடைந்ததாக, டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போது, அவர் நலமுடன் உள்ளார்.
Advertisement