வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : 'ஷரியத் கவுன்சில்' போன்ற தனி அமைப்பு முஸ்லிம் தம்பதியருக்கு விவாகரத்து சான்றிதழ் வழங்க முடியாது' எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், பெண் ஒருவர் பெற்ற சான்றிதழை ரத்து செய்து உத்தரவிட்டது.
முஸ்லிம் மதத்தில் மனைவியை விவாகரத்து செய்ய பின்பற்றப்படும் 'தலாக்' நடைமுறையை போல, கணவனை மனைவி விவாகரத்து செய்ய, 'குலா' நடைமுறை உள்ளது. இதன் அடிப்படையில், உள்ளூர் ஜமாத்தில் மனைவி பெற்ற குலா சான்றிதழை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கணவன் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், '2013- ஆக., 18ல் எங்களுக்கு திருமணம் நடந்து; 2015ல் ஆண் குழந்தை பிறந்தது. கருத்து வேறுபாடால் என்னை விட்டு பிரிந்து சென்ற மனைவி, ஜமாத்தில் குலா சான்றிதழ் பெற்றுள்ளார். 'இச்சான்றிதழை காட்டி, விவாகரத்து பெற்றதாக கூறுகிறார். எனவே, அந்த சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அப்துல் முபீன் வாதிட்டதாவது:
முகலாயர், ஆங்கிலேயர் காலத்தில் பின்பற்றப்பட்ட 'பத்வா' முறைக்கு, சுதந்திர இந்தியாவில் சட்டப்படி அனுமதி வழங்கப்படவில்லை. அவையெல்லாம் சட்டப்படி செல்லாது என, உச்ச நீதிமன்றம், 2014-ல் தீர்ப்பு அளித்துள்ளது.

ஷரியத் கவுன்சில் விவாகரத்து வழங்க முடியாது என்று, 2016-ல் உயர் நீதிமன்றமும் தீர்ப்பு அளித்துள்ளது.
இதுபோன்ற மற்றொரு தீர்ப்பை, 'டிவிஷன் பெஞ்ச்' வழங்கி உள்ளது. இவற்றை மீறி, தற்போது மனுதாரர் மனைவிக்கு குலா என்ற விவாகரத்து சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
இத்தனைக்கும், மனைவியுடன் சேர்ந்த வாழ, மனுதாரர் குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, உத்தரவும் பெற்றுள்ளார்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
ஷரியத் கவுன்சில் போன்ற தனி அமைப்பு, இதுபோல விவாகரத்து சான்றிதழை சட்டப்படி வழங்க முடியாது.
இந்த கவுன்சில் நீதிமன்றம் அல்ல. முஸ்லிம் சட்டப்படி, குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி, பெண்கள் குலா சான்றிதழை பெறலாம். ஜமாத் போன்ற அமைப்புகளில், இதுபோல விவாகரத்து சான்றிதழ் பெற முடியாது.
எனவே, மனுதாரரின் மனைவி, 2017-ல் பெற்ற குலா சான்றிதழ் ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரும், அவரது மனைவியும், மாநில சட்டப்பணி ஆணைக்குழு அல்லது குடும்பநல நீதிமன்றத்தை அணுகி, தங்களின் பிரச்னைகளை தீர்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.