''தமிழக உள்ளாட்சித் துறையில் கட்டட அனுமதிக்கு நடந்த லஞ்சத்தை எதிர்த்ததால், பொய்க்காரணம் கூறி என்னைப் பழிவாங்கியுள்ளனர்'' என, டிஸ்மிஸ் செய்யப்பட்ட நகரமைப்பு ஆய்வாளர் அறிவுடைநம்பி தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளராகப் பணியாற்றியவர் அறிவுடை நம்பி, 49; அதற்கு முன்பாக வால்பாறை நகராட்சியில் பணியாற்றி வந்த இவரை, பணி மாறுதல் செய்தபோது, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக 'வாட்ஸ்ஆப்' மூலமாக வீடியோவை வெளியிட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
வால்பாறையில் துாய்மைப் பணியாளர் குடியிருப்பிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றியதாலும், அனுமதியற்ற கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்காகவும் தன்னை பணி மாறுதல் செய்ததாக அதில் அவர் காரணம் கூறியிருந்தார். நண்பர்கள் கேட்டுக் கொண்டதால், தற்கொலை முடிவைக் கைவிட்டதாக அடுத்த வீடியோ பதிவையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
துணிச்சலாக தகவல்
தமிழ்நாடு நகரமைப்பு ஆய்வாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளராக இருக்கும் அறிவுடைநம்பி, தமிழகத்தில் இதுவரை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, கட்டட அனுமதிக்கு உள்ளாட்சித்துறையில் லஞ்சம் வாங்கப்படுவதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். நகரமைப்பு ஆய்வாளர் யாரும் லஞ்சம் வாங்கித்தரக்கூடாது எனவும் துணிச்சலாக தகவல் வெளியிட்டார்.
நெல்லியாளம் நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளராகப் பணி செய்த இவரை, டிஸ்மிஸ் செய்து, கடந்த வாரத்தில் உத்தரவு வழங்கப்பட்டது. காயல்பட்டினம் நகராட்சியில், 2021ல் பணியாற்றும்போது, பொதுமக்கள் மத்தியில் கலவரத்தைத் துாண்டும் விதமாகவும், அரசியல் தலைவர்களை தரக்குறைவாகவும் பேசி 'வாட்ஸ்ஆப்'பில் ஆடியோ பதிவிட்டதாக புகார் இருந்தது.
அந்த புகாரின்பேரில், 2021 மார்ச் 2ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பின்பு மீண்டும் பணியில் சேர்ந்திருந்தார். அந்த புகார் தொடர்பாக நடந்த விசாரணையில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, கடந்த வாரத்தில் அவரை டிஸ்மிஸ் செய்து, காயல்பட்டினம் நகராட்சி கமிஷனர் குமார்சிங் உத்தரவு வழங்கியிருந்தார். அவருக்கு மேல் முறையீடு செய்வதற்கு, 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பொய்க்காரணம்
இதுகுறித்து நமது நிருபரிடம் அறிவுடைநம்பி கூறியதாவது:
அரசு அலுவலர் ஒருவரை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்வதற்கு, அரசுப் பணத்தை கையாடல் செய்வது, நகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுத்துவது, கையூட்டு வாங்குவது, நகராட்சி விதிகளுக்கு முரணாக செயல்பட்டிருப்பது என ஏழு காரணங்களில் ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டும். ஆனால், இவை எதுவுமே என் மீது கிடையாது. எனது ஆடியோ பதிவு, கலவரத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தாக பொய்க்காரணம் கூறப்பட்டுள்ளது.
என்னுடைய ஆடியோ பதிவால், அங்கு கலவரம் எதுவும் நடக்கவில்லை. அங்கு ஐந்து குடியிருப்புக் கட்டடங்களுக்கு அனுமதி வாங்கி விட்டு, அவற்றை ஒருங்கிணைத்து 'பார்க்கிங்' இல்லாத வணிக வளாகமாக மாற்றியிருந்தனர். இன்றும் அதைப் பார்க்க முடியும். அதன் மீது நடவடிக்கை எடுத்ததால் என் மீது இப்படியொரு பழியைப் போட்டுள்ளனர்.
போராடுவேன்
இந்த திராவிட மாடல் ஆட்சியில், உள்ளாட்சித் துறையில் கட்டட அனுமதிக்கு லஞ்சம் வாங்குவதை நான் எதிர்த்தேன். கட்டட அனுமதிக்கு லஞ்சம் வாங்கித்தர மாட்டோம் என்று எங்கள் சங்கத்தின் சார்பில் தீர்மானம் போட்டோம். இதனால்தான் என் மீது தனிப்பட்ட வெறுப்பு ஏற்பட்டு, உரிய காரணமின்றி என்னை டிஸ்மிஸ் செய்துள்ளனர்.
இதனை எதிர்த்து, நான் கோர்ட்டுக்குச் சென்று சட்டரீதியாக போராடுவேன். நான் நேர்மையாகப் பணியாற்றிய அரசு ஊழியன். இன்னும் வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறேன். என்னுடைய மகன்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். திடீரென இப்படி ஒருவரை டிஸ்மிஸ் செய்தால், அந்தக் குடும்பத்தின் நிலை என்னவாகுமென்பதையும் சிந்திக்காமல் செயல்படுவதுதான் இந்த அரசின் சமூகநீதியாகத் தெரிகிறது.
இவ்வாறு, அறிவுடைநம்பி கூறினார்.
சட்டரீதியான போராட்டத்திற்குப் பின்னும், பணி வாய்ப்பு மறுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று அறிவுடைநம்பியிடம் கேட்டபோது, ''இந்த அரசின் ஊழலை, லஞ்சத்தை எதிர்த்துப் போராடி வரும் பா.ஜ., தலைவர் அண்ணாமலையிடம் என்னுடைய நிலையை விளக்கவுள்ளேன். அவர் அனுமதித்தால், பா.ஜ.,கட்சியின் தலைமைக்கழகப் பேச்சாளராக பணியாற்றத் தயாராகவுள்ளேன்!'' என்றார்.