வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: ''அறிவியல் என்பது பொளாதார வளர்ச்சிக்கு மட்டும் பங்காற்றவில்லை. சமூக சீர்திருத்தங்களுக்கும் உதவியுள்ளது'' என புதுச்சேரியில் நடைபெற்ற 'ஜி -20' மாநாட்டில் பேராசிரியர் அஷிதோஷ் சர்மா பேசினார்.

புதுச்சேரியில் நேற்று துவங்கிய 'ஜி -20'அமைப்பின் மாநாடு துவக்க விழாவில் வரவேற்புரையாற்றிய, இந்திய அறிவியல் கழக இயக்குனர் ரங்கராஜன் பேசியதாவது:
'ஜி-20' நாடுகளின் இலக்குகளை அடைய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. இன்று மிகப் பெரும் பிரச்னைகளாக உள்ள பருவநிலை மாறுதல், பெருந்தொற்று பரவல், எரிசக்தி பாதுகாப்பு, நீர் மேலாண்மை, உணவு பற்றாக்குறை ஆகியவற்றை ஒரே ஒரு நாடு மட்டும் தன்னளவில் தீர்க்க முடியாது. இதற்கு பல நாடுகளின் ஒத்துழைப்பு, நட்புறவு அவசியம் இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
'அறிவியல் - 20' மாநாட்டிற்கு தலைமை தாங்கி, இந்திய தலைமை பொறுப்பில் உள்ள பேராசிரியர் அஷிதோஷ் சர்மா துவக்கவுரையில் பேசியதாவது:
உலகளவிலான வளர்ச்சிக்கு இன்றியமையாத கூறுகளாக அறிவியல், தொழில்நுட்பத்தை மதிக்கும் பல நாடுகளின் விஞ்ஞானிகள் கூட்டத்தை இந்தியா நடத்துவது பெருமையான நிகழ்வாகும்.
அறிவியல் என்பது நமது பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமே பங்காற்றவில்லை. கூடுதலாக சமூக சீர்திருத்தங்களுக்கும் அறிவியல் உதவியுள்ளது. அறிவியலின் வளர்ச்சியால் தான் உலகில் வறுமை விகிதம் பெருமளவு குறைந்துள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தேசிய தடைகளை நீக்குகிறது. உலகை ஒருங்கிணைப்பதோடு அமைதியை முன்னெடுக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். அறிவியலின் ஆக்கப்பூர்வ பங்களிப்புக்கு பிரதமரின் கூற்று, அணி சேர்ப்பதோடு உலகின் எதிர்கால நம்பிக்கைக்கும் வழிவகுக்கிறது.
பல தரப்பு ஒத்துழைப்பு, நட்புறவோடு அறிவியல் ஆராய்ச்சி, கல்வி மற்றும் புத்தாக்கங்களை நமது சொந்த நாட்டிலும், நாடுகளின் எல்லை கடந்து உலக அளவில் முன்னெடுப்பதற்காக நாம் இங்கு கூடியுள்ளோம். நாம் எதிர்காலம் குறித்தும் விவாதிக்க உள்ளோம்.

இன்றைய தலைமுறை அறிவியல் வளர்ச்சி வசதிகளைப் பெற்று, வளரும் தலைமுறையாக உள்ளது. இளைஞர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் பெரும்பங்கு வகிக்கிறது.
இன்று பிறக்கும் குழந்தைகள் நம்பிக்கையின் காலகட்டத்தில் பிறந்தவர்கள், பிறக்கின்றவர்கள். எதிர்கால தலைமுறைக்கும் பல பிரச்னைகள் உள்ளன. நமது வீடுகள் டிஜிட்டல் மயமாகி விட்டன. நமது வாழ்வும் டிஜிட்டல் மயமாகிறது. சமூகத்தில் இதற்கு இணையான மாற்றங்கள் மெதுவாகவே ஏற்பட்டு வருகிறது.
நாம் முன்வைத்து பேசும் பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்தும் அறிவியல் தொழில்நுட்பம் என்பது புதிய தீர்வுகளைத் தரக்கூடியது.
இன்றைய ஆரம்ப நிலைக் கூட்டத்தின் இலக்கு என்பது இனி தொடர்ந்து நடக்கும் கூட்டங்களுக்கான கருத்து வரைவு உருவாக்குவது தான். அறிவியல் உச்சிநிலை கூட்டம் கோவையில் நடைபெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.