சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச்சின்னத்தை கடலில் வைக்க நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார். கடலில் வைத்தால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் எனவும், கடலில் வைக்காமல் மாற்று இடத்தில் வைக்கலாம் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, சென்னை மெரினாவில் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நினைவிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. கருணாநிதியின் எழுத்தாற்றல் குறித்து விளக்கும் வகையில், வங்க கடலில் 100 அடியில் பேனா நினைவு சின்னம் வைப்பதற்கு, அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த மத்திய சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஜன.,31) நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி, ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், பல்வேறு இயக்கங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். இதில், பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பும், ஆதரவும் பதிவானது. எதிர்ப்பு தெரிவித்து பேசும்போது வாக்குவாதம் ஏற்பட்டதுடன், கூட்டத்தினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.
கடலில் வைக்க எதிர்ப்பு
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கருத்தினை தெரிவித்துவிட்டு, செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாற்று கருத்து கூறினாலே கூச்சலிடுவது அநாகரீகம். கூச்சலுக்கு பயப்பட மாட்டோம்.
கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் வைப்பதை ஏற்கிறோம். ஆனால் அதனை கடலுக்குள் வைப்பதை தான் எதிர்க்கிறோம். இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும். அதனை பார்வையிடும் மக்கள் குப்பைகள், பிளாஸ்டிக்குகளை கடலுக்குள் போடுவார்கள். இதனால் கடல் மாசு ஏற்படும், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

போராட்டத்தை முன்னெடுப்போம்
நிதி இல்லை, நிதி இல்லை எனக்கூறுகின்றனர், ஆனால் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மட்டும் எங்கிருந்து காசு வருகிறது? பேனா நினைவு சின்னத்தை கடலுக்குள் வைப்போம் என அடம்பிடிக்க காரணம் என்ன? பேனா நினைவுச்சின்னத்தை மாற்று இடத்தில் வைக்க வேண்டும்.
கடலுக்குள் நினைவுச்சின்னம் வைக்க விடாமல் கடுமையான போராட்டத்தை முன்னேடுப்போம். நினைவுச்சின்னத்தை மதுரையில் அமையவுள்ள கருணாநிதி நூலகத்தில் அமைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.