புதுடில்லி: இந்திய பொருளாதார வளர்ச்சி 2023 -24 நிதியாண்டில் 6.5 சதவீதம் ஆக இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பார்லி., பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு இன்று முதல் பிப்ரவரி 13 வரை நடைபெறவுள்ளது. துவக்க நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அவரது உரையைத் தொடர்ந்து, பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இந்த ஆய்வறிக்கையானது தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரனின் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்டது.
ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
*இந்திய பொருளாதாரம் 2023 - 24 ல் 6.5 சதவீம் வளரும். தற்போதைய நிதியாண்டில் அது 7 சதவீதமாக இருக்கும். 2021- 22 ல் 8.7 சதவீதமாக இருந்தது.
*உலகில், தொடர்ந்து வேகமாக வளரும் நாடாகவே இந்தியா நீடிக்கிறது.
*வாங்கும் திறன் அடிப்படையில் இந்தியா 3வது பெரிய பொருளாதாரமாகவும் , எக்ஸ்சேஜ் ரேட் அடிப்படையில் 5வது பெரிய நாடாகவும் திகழ்கிறது.
*கோவிட்டால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டு விட்டது. கோவிட் காலத்தில் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த இழப்பை கிட்டத்தட்ட மீட்டுவிட்டோம். கோவிட் மற்றும் உக்ரைன் போர் காரணமாக இழந்த பொருளாதாரம் மீட்கப்பட்டுள்ளது.
*உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதாரம் மிகச்சிறப்பாக மீண்டுள்ளது. 2022ல் கோவிட்டிற்கு முந்தைய நிலையை நமது பொருளாதாரம் அடைந்துவிட்டது.
*நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 6.8 சதவீதம் ஆக இருக்கும். இது தனியார் நுகர்வை தடுக்கும் அளவுக்கு அதிகமாகவும், முதலீட்டை பலவீனப்படுத்தும் அளவுக்கும் இல்லை.
*கடன் வாங்கும் அளவு நீண்ட காலம் அதிகமாகவே இருக்கும்.
*அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தும் சாத்தியக்கூறுகளுடன் உள்ளதால், ரூபாய் மதிப்பு சரிவுக்கான சவால் நீடிக்கிறது.

*உலகளாவிய பொருட்களின் விலைகள் உயர்த்தப்படுவதால், நடப்புக்கணக்கு பற்றாக்குறை தொடர்ந்து விரிவடையும். ரூபாய் மதிப்பு நெருக்கடிக்கு உள்ளாகலாம்.
*தொற்று நோயில் இருந்து இந்தியா மீள்வது ஒப்பீட்டளவில் விரைவாக உள்ளது. வளர்ச்சி உள்நாட்டு தேவையால் ஆதரிக்கப்பட வேண்டும். மூலதன முதலீட்டை உயர்த்த வேண்டும்.
*நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் ஏற்றுமதியின் வளர்ச்சி மிதமானது.
*பெரும்பாலான பொருளாதாரங்களை விட இந்தியா அசாதாரண சவால்களை எதிர்கொண்டது.
*உலக வளர்ச்சி குறைதல், உலகளாவிய வர்த்தகம் சுருங்குவது ஆகியவை நடப்பு ஆண்டின் 2வது பாதியில் ஏற்றுமதி பாதிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.