வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், சீனா உடனான எல்லை பிரச்னைகளை எழுப்ப முடிவு செய்துள்ளோம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
பாரத் ஜோடோ நிறைவு யாத்திரையில் கலந்து கொள்ள காஷ்மீர் சென்ற மல்லிகார்ஜூன கார்கே, ஆதிர்ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அங்கு நிலவிய மோசமான சூழ்நிலையால் விமானம் கிளம்ப தாமதமானது. இதனால், அவர்கள் பார்லிமென்டின் கூட்டத்தொடரில், ஜனாதிபதி உரையின் போது அவையில் அவர்கள் பங்கேற்க முடியவில்லை என காங்., மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார்.

இந்நிலையில் டில்லி விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், ஜனாதிபதி உரையை கேட்க பார்லிமென்டில் இருக்க விரும்பினோம். ஆனால் மோசமான வானிலை காரணமாக இங்கு வர தாமதமானது. இதற்காக மன்னிட்டு கேட்டு கொள்கிறேன். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை மற்றும் சீனா உடனான எல்லை பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளோம்.

சில தொழிலதிபர்களுக்கு பொதுத்துறை வங்கிகள் அதிக கடன் வழங்கி உள்ளது குறித்தும் கேள்வி எழுப்புவோம். இது போன்றவை நாட்டிற்கு நல்லது அல்ல என நாங்கள் நினைப்பதால், கேள்வி எழுப்புகிறோம். ஆனால், அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பதில் சொல்வது கிடையாது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு, காஷ்மீரில் தேசியக்கொடி ஏற்றிய ராகுலை பாராட்டாமல், விமர்சனம் செய்கிறது. இது, யாரும் நல்லது செய்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பதை காட்டுகிறது. இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.