வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை:டெல்டா மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், தானியங்களை பாதுகாப்பாக வைக்க, வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், 12.8 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி பருவ நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தற்போது, சம்பா பருவ நெல் பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அறுவடை பணிகள், வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கல்லணை, கீழணை, சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டியது. மழையால் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டு உள்ளது. நெல் அறுவடை பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.
இதற்கிடையில், இன்று முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், அறுவடைக்கு தயாராகும் நெல் பயிர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
அறுவடை செய்யப்பட்டு, திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் உள்ளிட்ட தானியங்களை தார்பாய் போட்டு பாதுகாப்பாக வைக்கும்படி, விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் வழங்கவும், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர்கள், தோட்டக் கலை துணை இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.