திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த, காக்களூர் தொழிற்பேட்டை அலுவலகத்தில், உற்பத்தியாளர் சங்கத்தினருக்கான, வருமான வரி பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
காக்களூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்க தலைவர் சுப்ரமணியன், செயலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சேகர் தலைமை வகித்து பேசுகையில், ''உற்பத்தியாளர் மத்தியில், வருமான வரி செலுத்துவது குறித்து அச்சம் நிலவுகிறது.
''இதை நீக்கி, வருமான வரி பிடித்தம் தாக்கல் செய்வதால், அவர்களுக்கு ஏற்படும் நன்மை, தாக்கல் செய்யாவிட்டால் ஏற்படும் பிரச்னை குறித்து ஆலோசனை வழங்கப்படும்.
''தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட தொழிற்பேட்டைகளிலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும்,'' என்றார்.
சென்னை வருமான வரித் துறை அலுவலர்கள், ஸ்ரீதர், ராஜாராமன் பங்கேற்று பேசுகையில், ''உச்சபட்ச தனி நபர் வருவாய், 2.5 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை.
''அதற்கு மேல் வருவாய் கிடைத்தால், அரசுக்கு கட்டாயம் வரி செலுத்த வேண்டும். வருமான வரி பிடித்தம் - டி.டி.எஸ்., பதிவேற்றுவதன் வாயிலாக, கூடுதலாக செலுத்தப்பட்ட வருமான வரியை, வட்டியுடன் திரும்ப பெறலாம்,'' என்றனர்.
இந்த கூட்டத்தில், காக்களூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்சங்க நிர்வாகிகள், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Advertisement