பொள்ளாச்சி:பொள்ளாச்சி - மீன்கரை ரோட்டில், குஞ்சிபாளையம் பிரிவில், 'சென்டர் மீடியன்' அமைக்கப்படாததால், வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகின்றனர்.
பொள்ளாச்சி - மீன்கரை ரோடு, கேரளாவை இணைக்கும் முக்கிய ரோடாக உள்ளது. இந்த ரோட்டில், ஜமீன் ஊத்துக்குளி அடுத்துள்ள குஞ்சிபாளையம் பிரிவு, சிங்காநல்லுார், நாயக்கன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் வழியாக கோட்டூரை இணைக்கும் முக்கிய ரோடாக உள்ளது.
இதனால், குஞ்சிபாளையம் பிரிவில் வாகன போக்குவரத்து அதிகமுள்ளது.
வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சில மாதங்களுக்கு முன், 90 லட்சம் ரூபாய் மதிப்பில், ரோட்டின் இருபக்கமும், 45 மீட்டர் அளவுக்கு விரிவாக்கப்பட்டது. அதன்பின், 'சென்டர் மீடியன்' அமைக்கப்படவில்லை.
இதனால், பொள்ளாச்சி --- மீன்கரை ரோட்டில், இருபக்கமும் இருந்து வரும் வாகனங்களுடன், குஞ்சிபாளையம் வழித்தடத்தில் வரும் வாகனங்கள், ஒன்றோடு ஒன்று மோதி, விபத்தில் சிக்குகின்றன.
இதை தடுக்க, 'சென்டர் மீடியன்' அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
நெடுஞ்சாலைத்துறை சார்பில், 'சென்டர் மீடியன்' அமைக்கப்படும் என்பதற்காக, 'மார்க்' மட்டும் செய்யப்பட்டுள்ளது.
இன்னும், தடுப்புகள் அமைக்காததால், வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. அருகிலேயே, டாஸ்மாக் மதுக்கடை செயல்படுவதால், தினமும் விபத்து ஏற்படுகிறது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாநில நெடுஞ்சாலைத்துறை ரோடு விரிவாக்க பணிகள் நடக்கிறது. இப்பணிகள் முடிந்ததும், இங்கு, 3 லட்சம் ரூபாய் செலவில், 'சென்டர் மீடியன்' அமைக்கப்படும்' என்றனர்.