கிணத்துக்கடவு:பொள்ளாச்சி - கோவைக்கு இயக்கப்படும் தனியார் பஸ்களில், இஷ்டம் போல் கட்டணம் வசூலிப்பதால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பொள்ளாச்சி --- கோவை வழித்தடத்தில், அதிக அளவில் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு நிர்ணயித்துள்ள பயண கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதில், கிணத்துக்கடவில் இருந்து, கோவைக்கு செல்லும் பயணியரிடம், தனியார் பஸ்களில், பல விதமாக கட்டணம் வசூலிக்கின்றனர். ஒவ்வொரு தனியார் பஸ்சுக்கும் கட்டணம் மாறுபடுகிறது.
கிணத்துக்கடவில் இருந்து, கோவை செல்ல, 17 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், 18 முதல் 20 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். மேலும், பயணிகளுக்கு மீதி சில்லரை கொடுக்க கண்டக்டர்கள் அலைக்கழிக்கின்றனர்.
ஒரு சில தனியார் பஸ்களில் வழங்கும் டிக்கெட்களில் பயணியர் ஏறி, இறங்கும் இடங்களும் குறிப்பிடப்படுவதில்லை. இதுபற்றி, தனியார் பஸ் கண்டக்டர்களிடம் கேள்வி கேட்கும் போது, பயணியருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். கேள்வி கேட்பவர்களை பாதி வழியில் இறக்கி விடுகின்றனர்.
இதுகுறித்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.