பொள்ளாச்சி:பல்லாண்டு தோட்டக்கலை பயிர்கள் திட்டத்தில் பயன்பெற, விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலைத்துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த, வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்படும் கிராமங்களில், பல்லாண்டு தோட்டக்கலை பயிர்கள் பரப்பு விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன்படி, பொள்ளாச்சி தெற்கு தோட்டக்கலை வட்டாரத்தில், கோமங்கலம்புதுார், நல்லாம்பள்ளி, சீலக்காம்பட்டி, மலையாண்டிபட்டணம், சிஞ்சுவாடி, தென்குமாரபாளையம், வக்கம்பாளையம் கிராமங்களில், திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், மா, பலா, எலுமிச்சை, நெல்லி, கொய்யா, சப்போட்டா, கொடுக்காபுளி, நாவல், சீதா, மாதுளை, அத்தி, மங்குஸ்தான், முருங்கை, ஜாதிக்காய், புளி, முந்திரி, மிளகு, ரோஜா, மல்லிகை, ஜாதி மல்லி பூக்களின் விதைகள் வழங்கப்பட உள்ளன.
ஏக்கருக்கு 12 ஆயிரம் ரூபாய் முதல், 18 ஆயிரம் ரூபாய் வரை, மானியம் வழங்கப்படுகிறது.
திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், சிட்டா அடங்கல், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு நகல் மற்றும் புகைப்படத்துடன் தெற்கு வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகத்தையோ அல்லது உதவி தோட்டக்கலை அலுவலர்களையோ அணுகலாம், என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.