பொள்ளாச்சி:'நீர்நிலைகளில் கழிவு கொட்டுவதை தவிர்ப்போம்; ஈரநிலங்களை பாதுகாப்போம்,' என, ரெட்டியாரூர் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
பொள்ளாச்சி அருகே, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., மேல்நிலைப் பள்ளியில், தேசிய பசுமைப்படை சார்பில், உலக ஈரநிலங்கள் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் கிட்டுசாமி தலைமை வகித்தார்.
உதவி தலைமை ஆசிரியர்கள் பூவிழி, மகாலட்சுமி மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் ராஜேஸ்வரி, கீதா ஆகியோர் ஈரநிலங்கள் பாதுகாப்பதன் அவசியத்தை விளக்கினர்.
ஆசிரியர்கள் பேசியதாவது:
தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ, நீரால் மூடப்பட்டு இருக்கும் இடங்கள் ஈரநிலங்கள் ஆகும். ஈர நிலங்களை பாதுகாப்பதன் வாயிலாக பல்லுயிர் வளங்கள் மற்றும் கலாசாரம் பாதுகாக்கப்படுகிறது. அதிக மழை கிடைக்கும் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் பாதுகாக்கின்றன.
புயல் காலங்களில் ஏற்படும் கரையோர மண் அரிப்பை தடுக்கின்றது. ஈரநிலங்களில் முக்கியமாக தரைக்கு கீழ் நீரின் தரத்தை பாதுகாக்கிறது. விவசாய உற்பத்திகளையும், நீர்ப்பாசன தேவைகளையும், குடிநீரையும் பெற்றுக்கொள்ள, குளங்கள், நீர்த்தேக்கங்கள் என்ற பெயரிலும், நீர் மின்சாரத்தை பெறுவதற்குமாக பயன்படுகிறது. கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களாக விளங்குகிறது. மீன் இனங்களின் இனவிருத்திக்கு ஏற்ற இடங்களாக உள்ளதோடு மீன்பிடி, உப்பு உற்பத்தி போன்றவற்றுக்கும் பயன்படுகிறது.
ஈரநிலப்பகுதிகளான ஏரி, குளம், குட்டை போன்றவற்றை பாதுகாப்போம். ஈரநிலம் உள்ள பகுதிகளில், நீர்நிலைகளை நிரப்பி குடியேறுவதை தவிர்ப்போம். கழிவை நீர்நிலைகளில் கொட்டுவதை தவிர்ப்போம். ஆண்டுதோறும், உலக ஈர நிலங்கள் தினம் பிப்.,2ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், உறுதியேற்று நீர்நிலைகளை காப்போம்.
இவ்வாறு, அவர்கள் பேசினர்.
ஈரநிலம் குறித்த, கேள்வி - பதில் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. தேசிய பசுமைப்படை ஆசிரியர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.