காஞ்சிபுரம்:தனியார் இயந்திரங்களின் வாடகை கட்டணத்தை காட்டிலும், வேளாண் பொறியியல் துறையினரிடம் குறைந்த கட்டணத்தில், வாடகை இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. பயன்பெற விரும்பும் விவசாயிகள், உழவன் செயலியில் விண்ணப்பிக்கலாம் என, அத்துறையினர் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய வட்டாரங்களில், 1.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில், நெல் மற்றும் காய்கறி பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
ஊராட்சிகளில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிஅளிப்பு திட்டத்தின் கீழ், 100 நாள் வேலை செய்யும் கூலித்தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், விவசாய பணிகளுக்கு ஆண் மற்றும் பெண் கூலியாட்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இருப்பினும், விவசாயம் செய்ய வேண்டும் என, பல்வேறு விவசாயிகள் வேளாண் கருவிகளை உபயோகப்படுத்தி நெல் மற்றும் காய்கறி பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகளிடம் அனைத்து விதமான இயந்திரங்களும் இருப்பதில்லை.
அதிக முதலீடு செய்து, விவசாயம் செய்யும் விவசாயிகள், உழவு இயந்திரம் முதல், நெல் அறுவடை இயந்திரங்கள் வரையில், சொந்தமாக கொள்முதல் செய்து, சொந்தமாக உபயோகப்படுத்தி வருகின்றனர்.
வாகனங்களுக்கு முதலீடு இல்லாத சிறு, குறு விவசாயிகள், வாடகை இயந்திரங்களை உபயோகப்படுத்தி நெல் மற்றும் காய்கறி ஆகிய பலவித பயிர்களை, சாகுபடி செய்து வருகின்றனர்.
சம்பா மற்றும் பின் சம்பா ஆகிய பருவங்களில், உழவு இயந்திரம், விதைப்பு இயந்திரம் மற்றும் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதுபோன்ற நேரங்களில், இயந்திரங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி விடுகின்றனர்.
இந்த கட்டணம், சிறு, குறு விவசாயிகளுக்கு பெரிதளவில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
இதைத் தவிர்க்க, வேளாண் பொறியியல் துறையினர் மூலமாக, குறைந்த வாடகைக்கு, வேளாண் கருவிகள் வாடகைக்கு அமர்த்தும் திட்டம் கொண்டு வந்துள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், இணைப்பு கருவியுடன் டிராக்டர். 'புல்டோசர்' எனப்படும் மண் தள்ளும் இயந்திரம், 'ஜே.சி.பி.,' எனப்படும் மண் அள்ளும் இயந்திரம், டிராக்டர் அறுவடை இயந்திரம் எனப்படும் சக்கர வகை நெல் அறுவடை இயந்திரம் ஆகியவை வாடகைக்கு வழங்க தயார் நிலையில் உள்ளன.
மேலும், முதலீடு செய்து இயந்திரங்களை கொள்முதல் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கவும் வேளாண் பொறியியல் துறையினர் தயாராக உள்ளனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வேளாண் பொறியியல் துறையில், ஜே.சி.பி., புல்டோசர், நெல் அறுவடை இயந்திரம், உழவுக் கருவிகள் வாடகைக்கு விடும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் சிறு, குறு மற்றும் இயந்திரங்கள் இல்லாத விவசாயி கள் உழவன் செயலி மூலமாக விண்ணப்பித்து தங்களுக்கு தேவையான விவசாய பணிகளை மேம்படுத்திக் கொள்ளலாம்.
இயந்திரங்களின் வகைக்கு ஏற்ப, ஒரு மணி நேரம் கட்டணம் நிர்ணயம் செய்து வசூலித்து வருகிறோம்.
இத்திட்டத்தில், விவசாயிகள் சேர்ந்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.