ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே படப்பை, ஆத்தனஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சரவணன், 38. 'எலக்ட்ரிஷியன்'மற்றும் 'பிளம்பர்' வேலை செய்து வந்தார்.
இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை படப்பை அருகே ஆரம்பாக்கம் டாஸ்மாக் கடை அருகே உள்ள புதர் மண்டிய பகுதியில் சரவணன் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
மணிமங்கலம் போலீசார் உடலை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சரவணனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், 38, என்பவருக்கும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டது தெரிந்தது.
இதனால், ஆரம்பாக்கம் டாஸ்மாக் கடை அருகே இருந்த பார்த்திபனை கொலை செய்ய நினைந்த சரவணன் கத்தியுடன் சென்று பார்த்திபனை தனியாக அழைத்துச் சென்று கத்தியால் வெட்ட முயன்றார்.
சுதாகரித்துக் கொண்ட பார்த்திபன் கத்தியை பிடுங்கி சரவணனை வெட்டி கொலை செய்து தப்பிச் சென்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் பார்த்திபனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.