பிப்ரவரி 1, 1873
சென்னை பம்மலில், விஜயரங்க முதலியார் - மாணிக்கவேலு அம்மாள் தம்பதிக்கு மகனாக, 1873ல் இதே நாளில் பிறந்தவர், ஞானசம்பந்தம். இவரின் தந்தை தமிழாசிரியர், பதிப்பாளர் என்பதால், சிறுவயதிலேயே நிறைய புத்தகங்களை வாசித்தார்.
சட்டம் படித்து, வழக்கறிஞராகி, பின்,நீதிபதியாக உயர்ந்தார். ஆங்கில நாடகங்களின் ரசிகரான இவர், பெல்லாரி நாடகக்குழுவில் வழக்கறிஞர்களும், மருத்துவர்களும் இருந்ததை கண்டு, 'சுகுண விலாச சபா'வை துவக்கி, புதிய நாடகங்கள் எழுதி இயக்கினார்.
நடிகர்களை, 'கூத்தாடி' என்ற போது, இவர் மட்டும், 'நாடகக் கலைஞர்' என்று அழைத்தார். ஷேக்ஸ்பியர் மற்றும் சமஸ்கிருத நாடகங்களை, தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப மாற்றினார். இவர், தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதிய நுால்கள், நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
இவரின், 'மனோகரா, லீலாவதி, சுலோச்சனா' உள்ளிட்ட நாடகங்கள், பலமுறை மேடையேறியதுடன், திரைப்படங்களாகவும் மாறின.
'பத்மபூஷண்' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், 1964 செப்டம்பர் 24ல், தன், 91வது வயதில் காலமானார். தமிழ் நாடகத் தந்தை பிறந்த தினம் இன்று!