விழுப்புரம் : தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு மாத காலத்திற்கு கன்று வீச்சு நோய்க்கான தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் இன்று 1ம் தேதி முதல் வரும் 28ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு கன்று வீச்சு நோய்க்கான தடுப்பூசி போடும் திட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தில் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை தகுதியுடைய 4 மாதம் முதல் 8 மாத வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு கருச் சிதைவு நோய்க்கான தடுப்பூசி போடப்படும். கிடேரி கன்றுகளுக்கு ஒருமுறை வாழ்நாள் தடுப்பூசி அளிக்கப்படுவதால் நீண்டகால எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்துகிறது.
இந்நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் நஞ்சுக்கொடி, ரத்தம் மற்றும் பால் மூலம் நச்சுயிரி வெளியேறும். மாசுபட்ட நஞ்சுக்கொடி மற்றும் ரத்தத்தை தொட்டு சுத்தம் செய்வதாலும், பாலை நன்கு காய்ச்சாமல் குடிப்பத்தாலும் இந்நோய் மனிதர்களுக்கும் பரவுகிறது.
பண்ணையில் சுகாதாரமான பராமரிப்பு முறைகளை பின்பற்றாமல் இருப்பது, கன்று வீச்சு ஏற்பட்ட கன்றுகளை முறையாக அப்புறப்படுத்தாமை ஆகியவை நோய் பரவுவதற்கு காரணமாகின்றன.
எனவே, மருத்துவக் குழுவினர் வரும் போது, கிடேரி கன்றுகளுக்கு கன்று வீச்சு நோய்க்கான தடுப்பூசியை போட்டு பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.