ரிஷிவந்தியம் : ஆதிதிருவரங்கம் அருகே மண் அரிப்பு ஏற்பட்டு இருந்த தார்சாலை, தினமலர் செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டது.
ரிஷிவந்தியம் அடுத்த ஆதிதிருவரங்கத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் தமிழகத்திலேயே மிகப்பெரிய அளவிலான அரங்கநாத பெருமாள் மூலவராக சயன நிலையில் அருள் பாலிக்கிறார். தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்வதற்காக இக்கோவிலுக்கு வருகின்றனர்.
இதில், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பகண்டைகூட்ரோடு, சீர்ப்பனந்தல் வழியாக ஆதிதிருவரங்கம் கோவிலுக்கு செல்கின்றனர்.
இதில், ஆதிதிருவரங்கத்திற்கு அருகே தார்சாலையின் ஓரப்பகுதியில் பல்வேறு இடங்களில் அரிப்பு ஏற்பட்டு, மண் சரிந்து இருந்தது. இதனால் வாகனங்கள் ஒன்றையொன்று கடந்து செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் நீடித்தது. இது குறித்து கடந்த தினங்களுக்கு முன் தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
அதன் எதிரொலியாக, சங்கராபுரம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சிவசுப்ரமணியன் மேற்பார்வையில், சாலை ஆய்வாளர் கதிர்வேல், சாலை பணியாளர்கள் பத்மநாபன், தாமோதரன் உட்பட 10க்கும் மேற்பட்டோர் தார்சாலையில் 400 மீட்டர் தொலைவுக்கு அரிப்பு ஏற்பட்ட இடங்களிலும், பள்ளங்களிலும் மண்கொட்டி ஜே.சி.பி., பொக்லைன் இயந்திரம் மூலம் சமன்படுத்தினர்.